மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர் + "||" + Diwali slip scam: Victims Siege the DGP office

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
கருவடிக்குப்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி பிரபாவதி. இவர்கள் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். நகை சீட்டுக்கு மாதம் ரூ.600, மளிகை பொருட்கள் சீட்டிற்கு மாதம் ரூ.400 என பல்வேறு பிரிவுகளாக பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கருவடிக்குப்பம், சாமிபிள்ளை தோட்டம், எழில் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் ஏஜெண்டாக இருந்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் 150 முதல் 200-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை பிரித்து பிரபாவதியிடம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 19-ந் தேதி அவர்கள் பிரபாவதியிடம் சென்று தாங்கள் செலுத்திய பணத்திற்கான பொருட்களை கேட்டுள்ளனர். அப்போது அவர் மறுநாள் வரும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் கடந்த 20-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு பூட்டி இருந்தது. அங்கு யாரையும் காணவில்லை.

எனவே அவர்கள் சீட்டு நடத்தி பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. அவர்கள் சுமார் ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள், இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள், பணம் கட்டியதற்கான அட்டையுடன் நேற்று இரவு 9 மணி அளவில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிதின் ரமேஷ் கவுல் மற்றும் போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மோசடி நடந்தது குறித்து புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சீட்டு கட்டி பாதிக்கப்பட்டவர்கள் இன்று (வியாழக் கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய திட்டமிட்டுள்ளனர்.