மாவட்ட செய்திகள்

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது முதல்-அமைச்சர் பேட்டி + "||" + The government would not have entertained the doctors' struggle if they did not return immediately, the first minister said

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது முதல்-அமைச்சர் பேட்டி

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது முதல்-அமைச்சர் பேட்டி
‘உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது வேதனையாக உள்ளது. தீபாவளி, மழை என்று எதையும் பாராமல் அமைச்சர்கள், அதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இரவு, பகல் களத்தில் இருந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். இது அனைவருக்கும் தெரியும்.

சிறுவனை மீட்கும் பணியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டது. மீட்பு பணிகளை அனைத்து ஊடகங்களும் வெளிப்படையாக வெளியிட்டது. முடிந்தவரை சிறுவனை உயிரோடு மீட்க முயற்சி செய்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிரோடு மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசின் மீது காழ்ப்புணர்ச்சி

சிறுவன் சுஜித் மரணம் விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அரசின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறார். மீட்பு பணியில் ஒரு குற்றமும் சொல்ல முடியாத அளவுக்கு அரசு விழிப்புடன் செயல்பட்டது. மீட்பு பணிகளுக்கு என்.டி.ஆர்.எப். மற்றும் எஸ்.டி.ஆர்.எப்., ஓ.என்.ஏ, என்.ஐ.டி. உள்ளிட்ட வீரர்களை பயன்படுத்தினோம். இந்த வீரர்கள் துணை ராணுவ படையை சேர்ந்தவர்கள் தான். அவர்களையே இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை உணராமல் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்.

சுஜித் விவகாரத்தில் அரசு தெளிவாக விளக்கம் அளித்தபோதும், அதை ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவது வருத்தம் அளிக்கிறது. சிறுவனின் சடலத்தை காட்டவில்லை என்று கூறி, தேவையில்லாத பிரச்சினையை உருவாக்குகின்றனர். விடிய, விடிய ஊடகங்கள் அந்த இடத்தில் தான் இருந்தது. சிறுவனின் உடலை பெற்றோரும் உடனிருந்தே அடக்கம் செய்தனர். அரசின் விளக்கத்தை சிறுவனின் பெற்றோரே ஏற்றுக்கொண்டனர். இதனால் தேவையற்ற புரளிகளை யாரும் பரப்ப வேண்டாம்.

தி.மு.க. ஆட்சியில்...

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. ஆட்சியில், தேனி மாவட்டத்தில் தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் மாயி இருளன் என்ற 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். அங்கு அந்த மீட்பு பணி நடந்தபோது, ஒரு அமைச்சர் கூட அங்கே செல்ல வில்லை. அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த ஸ்டாலினும் அங்கே செல்லவில்லை. இப்போது அவர் சொல்வதை போல, மீட்பு பணிகளில் எந்த தொழில்நுட்பத்தையும் அங்கு பயன்படுத்தவில்லை. அந்த 6 வயது சிறுவன் இறந்த நிலையில் தான் மீட்கப்பட்டான். இதை நான் ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. இருக்கின்ற நிலைமையை எடுத்து சொல்கின்றேன்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுவனை எடுத்திருக்கலாம். காலதாமதம் ஆன காரணத்தினால் அந்த சிறுவன் இறந்தான் என்ற குற்றச்சாட்டை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்படி சொல்கின்ற எதிர்க்கட்சி தலைவர், அப்போது ஆட்சியில் நீங்கள் இருந்தீர்கள். 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது ஏன் நீங்கள் சிறுவனை மீட்கவில்லை. எனவே வேண்டுமென்று திட்டமிட்டு ஒரு தவறான தகவலை பரப்பக் கூடாது. உண்மை நிலையை எடுத்து சொல்லவேண்டும். அதிகாரிகள், அமைச்சர்கள் கடினமாக பாடுபட்டு, அந்த சிறுவனை உயிரோடு மீட்க வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

சிறுவன் சுஜித் விவகாரத்தில் அரசு முறையாக செயல்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காத வகையில் ஊடகங்கள் தான் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

பிரச்சினைக்கு தீர்வு

தற்போது அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கத்தினரே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நானும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் ஏற்கனவே பேசி, பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம். ஆனால் அங்கீகாரம் இல்லாத சங்கத்தினர் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து முடிக்க ஒரு மாணவர் ரூ.67 ஆயிரத்து 500 மட்டுமே கட்டணம் செலுத்துகிறார். ஆனால் அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசு ரூ.1.24 கோடி செலவு செய்கிறது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம். அரசாங்கம் மக்களின்வரிப்பணத்தை செலவு செய்து அவர்களை மருத்துவ படிப்பு படிக்க வைக்கின்றோம். ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஏறக்குறைய ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை செலவு செய்து தான் மருத்துவ கல்வியை படிக்க முடியும்.

அரசு வேடிக்கை பார்க்காது

அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அரசு இவ்வளவு செலவு செய்து அவர்களுக்கு மருத்துவ கல்வியை வழங்குகிறது. பொறியியல், கலை கல்லூரிகளில் இவ்வளவு செலவு செய்வதில்லை. அரசுக்கு பல கல்லூரிகள் இருந்தாலும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது போல் இவ்வளவு அதிக தொகை அரசால் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாணவர்கள் அரசு பொது மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றபோது வைக்கின்ற பல்வேறு கோரிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கின்றோம்.

நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்ற சொன்னால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?. அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியும். ஏழை, எளிய மக்கள் தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களின் வரிப்பணத்தில் தான் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசால் செலவழிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றவர்கள், கோரிக்கையை நிறைவேற்றும் வரை பணிக்கு வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால், உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

பணிக்கு திரும்ப வேண்டும்

மக்கள் தான் முக்கியம். மக்கள் தான் எஜமானர்கள். மக்களுக்கு தான் அரசாங்கம். மக்களுக்கு தான் மருத்துவர்கள். ஆகவே, மக்கள் நலன் காத்து, ஏழை, எளிய மக்களுக்கு இருக்கின்ற இன்னல்களும், துன்பங்களும், துயரங்களும் போக்குவதற்கு தான் அரசாங்கத்தால் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார் கள்.

ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தபடி, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அந்த இடத்திற்கு வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்ததை அரசு நடைமுறைப்படுத்தும். எனவே, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை புரிய முன்வந்து பணிக்கு திரும்ப வேண்டும்.

நானும் விவசாயிதான்

வேளாண் ஒப்பந்த சாகுபடி திட்டத்திற்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் விவசாயிதான். உதாரணமாக, தக்காளி பயிரிடும்போது நல்ல விலை இருக்கும். ஆனால், அறுவடை செய்யும் காலத்தில் விலை வீழ்ச்சியடைந்துவிடும். விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டால் விவசாயிக்கு தகுந்த விலை கிடைக்கும். இது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம். இதில் எந்தவித இழப்பும் கிடையாது.

விவசாயி விருப்பப்பட்டால் தான் ஒப்பந்தம் போடப்படும். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, வியாபாரியுடன் ஒப்பந்தம் போடும்போது எந்த காலக்கட்டத்திலும் விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கும். இதில் என்ன தவறு இருக்கிறது?. இழப்பு ஏற்படுகின்ற காலங்களில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கின்றது.

சர்க்கரை விலை வீழ்ச்சி

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக சர்க்கரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் வறட்சி, மறுபுறம் போதிய கரும்பு விளைச்சல் இல்லை. இதனால் கரும்பு உற்பத்தி செலவு கிலோவிற்கு ரூ.35 என்றால், சர்க்கரை கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. அதனால் ரூ.10 நஷ்டம் ஏற்பட்டது.

அதனால், தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை. விவசாயிகளையும் ஆலை அதிபர்களையும் அழைத்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து நிதியை நாங்கள் கேட்டுள்ளோம். அரசாங்கம் தகுந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற பல இடர்பாடுகள் இருந்ததினால் சிக்கல் நிலவுகிறது. இருந்தாலும், அரசாங்கம் நிலுவையில் உள்ள தொகையை விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கு உரிய முயற்சியை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், ராஜா, சித்ரா, மனோன்மணி, மருதமுத்து, சின்னதம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
2. “கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. ‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.
4. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
5. கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.