மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல்: 28 வயது வாலிபரை மணம் முடிக்க பறந்து வந்த 45 வயது மலேசிய பெண் + "||" + Improper love blossomed in the Facebook 28 year old plaintiff Come to marriage 45 year old Malaysian girl

முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல்: 28 வயது வாலிபரை மணம் முடிக்க பறந்து வந்த 45 வயது மலேசிய பெண்

முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல்: 28 வயது வாலிபரை மணம் முடிக்க பறந்து வந்த 45 வயது மலேசிய பெண்
முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல் எதிரொலியாக, 28 வயது வாலிபரை திருமணம் செய்ய 45 வயது மலேசிய பெண் விமானத்தில் பறந்து வந்தார். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, முகநூல் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அறிமுகமானார். இவர்கள் 2 பேரும் முகநூல் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அடிக்கடி செல்போனிலும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களுக்கிடையே பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரை அமுதேஸ்வரி வற்புறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு 2 பேரும் உறவை துண்டித்து கொண்டனர்.

இந்தசூழ்நிலையில் மலேசியாவில் இருந்து கவிதா அருணாசலம் என்ற பெண், அசோக்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை அமுதேஸ்வரியின் அக்காள் என்றும், திருமணம் செய்து கொள்ளாததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறினார்.

இதனால் அசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் வேலை செய்த நிறுவனத்திலும் அந்த பெண் புகார் செய்தார். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் அசோக்குமாரை பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். இந்தநிலையில் மலேசியாவில் இருந்து கவிதா அருணாசலம் தேனி வந்தார்.

பின்னர் அசோக்குமாரை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடந்த 30-ந்தேதி தேனியில் உள்ள ஓட்டலுக்கு அசோக்குமார் சென்றார். அங்கு கவிதா அருணாசலத்தை சந்தித்தார்.

அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், இதுகுறித்து தேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அமுதேஸ்வரி, கவிதா அருணாசலம் என்ற பெயர்களில் அசோக்குமாரிடம் பேசியது ஒரே பெண் தான். 45 வயதான அவர், அமுதேஸ்வரி என்ற பெயரில் அசோக்குமாரிடம் அறிமுகமாகி காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில், அசோக்குமார் அவரிடம் இருந்து விலகினார். அதன்பிறகு கவிதா அருணாசலம் என்ற பெயரில் மீண்டும் அசோக்குமாரிடம் தொடர்பை ஏற்படுத்தினார்.

அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட், மலேசிய பணம், டைரி ஆகியவை இருந்தது. பாஸ்போர்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினோம். அதில் அந்த பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஷ்வரி என்பது தெரியவந்தது. அவர் தான் அமுதேஸ்வரி, கவிதா அருணாசலம் என்ற பெயர்களில் அசோக்குமாரிடம் பேசி இருக்கிறார்.

அசோக்குமாரை திருமணம் செய்வதற்காக மலேசியாவில் இருந்து விமானத்தில் தமிழகத்துக்கு வந்துள்ளார். பின்னர் தேனிக்கு வந்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரை வற்புறுத்தி உள்ளார். அந்த பெண்ணால் தமிழில் சரளமாக பேச முடியவில்லை. முகநூல் மூலம், முன்பின் தெரியாத பெண்ணிடம் மலர்ந்த முறையற்ற காதல் அசோக்குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

28 வயது உடைய அசோக்குமாரை திருமணம் முடிப்பதற்கு, 45 வயதான விக்னேஷ்வரி விரும்புகிறார். ஆனால் அசோக்குமாருக்கு விருப்பம் இல்லை. இதனால் விக்னேஷ்வரியை எச்சரித்து அனுப்பினோம். இருப்பினும் அவர், தேனி பகுதியிலேயே சுற்றித்திரிவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே விக்னேஷ்வரி, அசோக்குமாரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, தன்னை தகாத வார்த்தைகளால் அசோக்குமார் திட்டியதாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் விக்னேஷ்வரி புகார் செய்தார். அதன்பேரில், அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.