மாவட்ட செய்திகள்

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப திருவள்ளுவரை அவமதிக்கிறது பா.ஜனதா - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு + "||" + To divert the economic crisis BJP insults Thiruvalluvar G. Ramakrishnan indictment

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப திருவள்ளுவரை அவமதிக்கிறது பா.ஜனதா - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப திருவள்ளுவரை அவமதிக்கிறது பா.ஜனதா - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக திருவள்ளுவரை பா.ஜனதா கட்சி அவமதிக்கிறது என்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
கோவை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின செங்கொடியேற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சிதின நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மனித குல விடுதலைக்கு மார்க்சியமே மா மருந்து என்பதை ரஷ்ய புரட்சி வித்திட்டது. இந்த புரட்சி தின நாளை நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாசிச பா.ஜனதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

2-வது முறையாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள பா.ஜனதா அரசு மக்கள் பிரச்சினைகளை சிறிதும் தீர்க்கவில்லை. இதன் காரணமாக 50 ஆண்டுகளில் இல்லாத வேலை இழப்பு, பொருளாதார பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சலுகையை அள்ளித்தரும் இவர்கள் மக்களின் துயரங்கள் குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

தொழில் நசிவு, வேலையின்மை போன்ற காரணங்களால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள திராணியற்ற பா.ஜனதா அரசு தொடர்ந்து நாடு முழுவதும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் திருவள்ளுவரை முன்வைத்து அரசியல் திசை திருப்பல் நடவடிக்கையை பா.ஜனதா கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி மலிவான விளம்பரத்திற்காக திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி அவமானப்படுத்தி இருக்கிறார்.

திருவள்ளுவரை அவமதித்த அர்ஜூன் சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது. இவர் மீது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்குப்பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும். காந்தியை கொன்ற இவர்களே காந்தியை கொண்டாடுவதும், விவேகானந்தருக்கு காவி உடை அணிவிப்பதும், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கூடாது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் நடவடிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிரப்படுத்தும். நவம்பர் புரட்சிதின கொண்டாட்டம் அதற்கு உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதாவினர் ஸ்டிக்கர் ஒட்டுவது தலைகுனிவு - குமாரசாமி கண்டனம்
நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதாவினர் ஸ்டிக்கர் ஒட்டுவது தலைகுனிவு என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.