மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது + "||" + Devotees at Madurai Meenakshi Amman Temple The first Laddu offering is being offered for free today

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு பிரசாதம்  இலவசமாக வழங்கப்படுகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதி கோவிலை போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த தீபாவளி முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகள் நிறைவு பெறாததால் லட்டு பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் லட்டு தயாரிக்கும் எந்திரம் வடமாநிலத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. அந்த எந்திரத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து புதிய எந்திரம் மூலம் லட்டு தயாரிக்கும் சோதனை ஓட்டமும் நடந்தது. அதில் ஒரு மணி நேரத்தில் 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டது.

பக்தர்களின் வருகையை கணக்கில் கொண்டு தினமும் குறைந்தது 20 ஆயிரம் லட்டுகளை தயாரிக்க நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு வழங்குவதால் நேற்று மும்முரமாக லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்திலும், லட்டு வழங்கும் திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ஒரு மணி நேரத்துக்கு 30 கிராம் எடை கொண்ட 2,400 லட்டுகளை 15 பேர் கொண்ட குழுவினர் தயாரித்து வருகின்றனர். அவர்கள் தினமும் 20 ஆயிரம் லட்டுகளை தயார் செய்வார்கள். மீனாட்சி அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் லட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.