மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழலை பாரதீய ஜனதா உருவாக்குகிறது -சஞ்சய் ராவத் தாக்கு + "||" + Bharatiya Janata Party creates environment for presidential rule in Maratham - Sanjay Rawat
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழலை பாரதீய ஜனதா உருவாக்குகிறது -சஞ்சய் ராவத் தாக்கு
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை பாரதீய ஜனதா உருவாக்குகிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், நேற்று பாரதீய ஜனதா தலைவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரவில்லை. இந்த நிலையில், கவர்னரை பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்ததை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று (நேற்று) கவர்னரை சந்தித்த பாரதீய ஜனதா தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை? அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள்? ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே பாரதீய ஜனதா விரும்புகிறது. ஏனெனில் ஆட்சி அமைப்பதற்கு போதிய எண்ணிக்கை அவர்களிடம் இல்லை. சிவசேனாவிடம் ஆட்சி அமைக்க தேவையான பலம் உள்ளது. அதை சட்டசபையில் தெரிந்து கொள்வீர்கள்.
ஆட்சி அமைப்பது தொடர்பான சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா தொண்டரை போன்றவர் என்று பா.ஜனதா மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறுகிறார். உங்களை சிவசேனாவை சேர்ந்தவர் என்று நினைத்தால் சிவசேனாவினரை போல் நடந்து கொள்ளுங்கள்.
சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதி மிக முக்கியம். வாக்குறுதியை சிவசேனா உயிரை விட மேலானதாக கருதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கட்சி தாவுவதை தடுக்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாந்திராவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மும்பையில் வீடு இல்லை. எனவே சிவசேனா கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
முன்னதாக காலை சஞ்சய் ராவத் அளித்த ஒரு பேட்டியில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறினார்.
தேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஒருமித்த கருத்து இருந்தது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி என்று மீண்டும் திட்டவட்டமாக கூறிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை, அரசியல் மாற்றத்துக்காக தான் போராடுகிறோம் என்றார்.
சரத்பவார் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையால், தூங்கி கொண்டு இருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.