மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்த 3 பேர் கைது - மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Three arrested for killing Rowdy - Four more people police police

வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்த 3 பேர் கைது - மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்த 3 பேர் கைது - மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகர், பாரதி வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஜிம் பாண்டியன்(வயது 26). கடந்த புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள கைப்பந்து மைதானத்தில் செல்போனில் பேசியபடி உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் அடங்கிய கும்பல் ஜிம் பாண்டியன் மீது வெடிகுண்டுகளை வீசியும், அவரை அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.

இந்த கொலை குறித்து ஜிம் பாண்டியனின் அண்ணன் வீரமணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த சேது, கிருஷ்ணன், சுரேந்தர், அஸ்வின், பிரசாந்த், அருண், நரேஷ் ஆகிய 7 பேர் மீது புகார் செய்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிரபல ரவுடி அஸ்வினின் கூட்டாளியான கிருஷ்ணன் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜிம் பாண்டியன் தாக்கியுள்ளார். மேலும் தீபாவளியின் போது அஸ்வினின் மற்றொரு கூட்டாளியான சேதுவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை வீடுதேடி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜிம் பாண்டியனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி (அரியாங்குப்பம்), கார்த்திகேயன் (அதிரடிப்படை), சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், இளங்கோ, விஜயகுமார், தன்வந்திரி, தமிழரசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ஓடைவெளியை சேர்ந்த பிரபல ரவுடி அஸ்வின் (30), மணவெளி நரேஷ் (23), இந்திராநகர் சுரேந்தர் (18) ஆகிய 3 பேரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணன், சேது உள்பட மேலும் 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

போலீசாரின் பிடியில் சிக்கிய அஸ்வின் பிரபல ரவுடி ஆவார். இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி சமீபத்தில்தான் வெளியே வந்து இருந்தார். உடனே இந்த கொலையில் ஈடுபட்டு உள்ளார். பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜிம் பாண்டியனின் உடல் தகனம் நடந்த போது அங்கு வைத்து அவரது கூட்டாளிகள் பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை நடந்து 3 நாட்களான பிறகும் பதற்றம் நீடித்து வருவதால் அரியாங்குப்பம் பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.