மாவட்ட செய்திகள்

மதுரையில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை மூட வேண்டும் - மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்ற ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Operating in a rented building in Madurai The private school should be closed Transfer students to government school High Court orders

மதுரையில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை மூட வேண்டும் - மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்ற ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை மூட வேண்டும் - மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்ற ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கூடத்தை மூட வேண்டும் என்றும், அங்கு படித்துவரும் மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்றவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை, 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான கட்டிடம் மதுரை வடக்குமாசி வீதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் மாத வாடகை அடிப்படையில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கான வாடகை ஒப்பந்தம் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு நீட்டிக்கப்படவில்லை. சரியாக பராமரிக்காததால், பள்ளியை காலி செய்வது தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளியின் செயலாளர் செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முருகேசன் தரப்பு வக்கீல் சதீஷ்பாபு ஆஜராகி, “தனி நீதிபதியின் விசாரணையின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 3 மாதத்தில் கட்டிடத்தை காலி செய்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் அதை மறைத்து மேல்முறையீடு செய்துள்ளனர்“ என தெரிவித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சம்பந்தப்பட்ட, பள்ளியின் மேற்கூரை சம்பத் கமிஷன் பரிந்துரைத்த வழிகாட்டுதல்படி இல்லை என கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை 3 மாதத்தில் காலி செய்வதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அதை நிறைவேற்றாமல் மேல்முறையீடு செய்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் அவமதிப்பு நடவடிக்கையும், அதிக அளவு அபராதமும் விதிக்கப்படும். ஆனால் இந்த நீதிமன்றம் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட பள்ளியை வருகிற 11-ந்தேதி(அதாவது நாளை) மூடுவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மூடப்படும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டும் வரையில் அருகில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.