2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + Phase 2 of the Metro Rail Project To be completed by 2021; Yeddyurappa Announced
2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
2021-ம் ஆண்டுக்குள் 2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நிறைவடையும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் ரூ.494 கோடி மதிப்பீட்டில் கர்நாடக அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்க விழா பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலக அளவில் பெயர் பெற்றுள்ள பெங்களூருவில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியம். சாலைகளில் ஏற்படும் குழிகளை மூடும் நோக்கத்தில் பிதரஹள்ளி பகுதியில் ஒரு தார் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் சிக்னலை குறைக்கும் பொருட்டு, டாக்டர் முத்துராஜ் சர்க்கிளில் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, அரசு அதிகாரிகளுடன் பெங்களூரு வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி சில முடிவுகளை அறிவித்தேன். போக்குவரத்து நெரிசல், குப்பைகளை கழிவுகளை நிர்வகிப்பது, ஏரிகள் பாதுகாப்பு குறித்து முடிவுகளை அறிவித்துள்ளோம். பெங்களூரு போக்குவரத்து நிர்வாக ஆணையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
நகரில் 12 இடங்கள் அதிக வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகள் என்று கண்டறிந்துள்ளோம். இந்த 12 பகுதிகளில் பஸ் மற்றும் சைக்கிளுக்கு தனி பாதை அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் 2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நிறைவு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நகரில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்ட பணிகள் அமல்படுத்தப்படுகிறது. வரும் காலத்தில் பெங்களூரு அழகான நகரமாக மாற்றப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.