மாவட்ட செய்திகள்

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள் + "||" + The Maoist Kumari woman killed in Kerala

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்
கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்மநாபபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28-ந் தேதி தண்டர் போல்ட் என்று அழைக்கப்படும் அதிரடிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர் போல்ட் அதிரடிப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

போலீசாரின் அதிரடி தாக்குதலில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். குண்டு காயங்களுடன் 3 பேர் தப்பி ஓடினர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

மாவோயிஸ்டு பெண் யார்?

அவர்களில் சேலம் ஓமலூரை சேர்ந்த மணிவாசகம், புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக், சித்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரை பற்றிய முழுவிவரம் கிடைத்தது. ஆனால் கொல்லப்பட்டவர்களில் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணை பற்றி மட்டும் தகவல் உறுதிப்படுத்தவில்லை. அவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதில் போலீசார் உறுதியாக இருந்தனர்.

ஆனால் அவரை பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. முதலில் அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீமதியாக இருக்கலாம் என்று போலீசார் கூறினர். ஆனால் அதற்கான அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து கர்நாடகத்தை சேர்ந்த ஷோபனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கர்நாடக போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஷோபனாவும் இல்லை என்று கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.

மடிக்கணினி ஆய்வு

இதற்கிடையே தப்பி ஓடிய சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த தீபக் (32) என்பவரைபோலீசார் மடக்கினர். சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், மடிக்கணினிகள், பென் டிரைவ், செல்போன்களை கைப்பற்றினர். தொடர்ந்து 4 பேரின் உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டது.

மடிக்கணினியை போலீசார் ஆய்வு செய்த போது அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மற்றும் வீடியோ படங்கள் இடம் பெற்று இருந்தன. கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ படங்கள் இடம் பெற்று இருந்தன.

குமரியை சேர்ந்தவர்

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் குமரி மாவட்டம் அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சொர்ணம் மகள் அஜிதா (வயது 28) என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர் நாகர்கோவிலில் தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளார். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு பாதிரியாரின் உதவியுடன் சட்டக்கல்லூரி படிப்புக்காக மதுரைக்கு சென்றார்.

பிறகு திடீரென அஜிதா மாயமானார். அவரை பற்றி எந்தவொரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. சட்டப்படிப்பு படிக்கும் சமயத்தில் தான் அஜிதா, மாவோயிஸ்டு அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருப்பார் என தற்போது தெரியவருகிறது.

தாயார் கதறல்

இதையடுத்து அஜிதாவின் தாயார் சொர்ணத்துக்கு போனில் தகவல் தெரிவித்த கேரள போலீசார், சுட்டுக்கொல்லப்பட்ட அஜிதா உங்கள் மகள் தான். அவரது உடலை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டதும் அஜிதாவின் தாயார் அதிர்ச்சியில் உறைந்து போனார். படிப்பை பாதியில் விட்ட மகள், எங்கோ நன்றாக இருப்பார் என்று நினைத்திருந்த அவர், மகள் சுட்டு கொல்லப்பட்ட தகவலை கேள்விபட்டு கதறி அழுதார்.

மேலும் இதுகுறித்து சொர்ணம் கூறுகையில், மாவோயிஸ்டு அமைப்பில் சேர்ந்து இறந்து போன எனது மகளை பார்க்க நான் செல்ல மாட்டேன். உடலையும் வாங்க மாட்டேன் என தெரிவித்தார். இதனால் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் சொந்த ஊரான அழகப்பபுரம் மட்டும் அல்லாமல் குமரி மாவட்டத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்

மேலும் இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், அஜிதா பெற்றோருக்கு மூத்த மகள். இவருக்கு 2 தம்பிகள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. மற்றொருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் சொர்ணம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். அஜிதா வீட்டோடு உள்ள தொடர்பை கைவிட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் உள்ள நல்லது, கெட்டது என எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்ட அவர், சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறுகையில், சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்டு பெண் குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா என்ற தகவல் தெரிய வந்துள்ளது. மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்கு எதிராக செயல்பட்டு உயிரை விட்ட மகளின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று அவருடைய தாய் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை
ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
2. மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் சாவு திருவையாறு அருகே பரிதாபம்
திருவையாறு அருகே மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
3. திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை
கெலமங்கலம் அருகே திருமணமான 5 மாதத்தில் வடமாநிலத்தை சேர்ந்த புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. சேலத்தில் பெண் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர் கற்பழிக்க முயற்சியா?-பரபரப்பு தகவல்கள்
சேலத்தில் பெண் உள்பட 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் போலீசில் சிக்கினர். கொலையுண்ட பெண்ணை மர்ம நபர்கள் கற்பழிக்க முயன்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டு எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டு எழுப்பிய கோஷத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.