மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + "||" + Rainwater harvesting in residential area Steps to prevent - Minister Namachivayam confirmed

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,

புதுவையில் கனமழை பெய்துள்ள நிலையில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு வாய்க்கால்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

இந்தநிலையில் மழை நிவாரண பணிகள், அடு்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு செயலாளர்கள் சுர்பிர் சிங், அசோக்குமார், கலெக்டர் அருண், உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 2 மாதத்துக்கு முன்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்போது ரெயின்போ நகர், இந்திரா காந்தி சதுக்கம் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழையினால் சேதமான வீடுகள் குறித்தும் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பாவாணர் நகரில் இருந்து புதியதாக ஒரு வாய்க்கால் அமைத்து அங்கு தேங்கும் தண்ணீரை உழந்தை ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். இந்திரா காந்தி சிலையிலிருந்து வரும் வாய்க்காலை புதியதாக அமைக்க கூறியுள்ளோம். ரெயின்போ நகரில் சிலர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து, அதை அகற்றாமல் இருக்க தடை உத்தரவும் பெற்றுள்ளனர். அந்த தடையை விலக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் 115 குளங்களும், காரைக்காலில் 111 குளங்களும் தூர்வாரப்பட்டன. அங்கு நீர்நிரம்பி உள்ளது. தற்போது வீடூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மழையால் சேதமடைந்த சாலைகளை பழுதுபார்க்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் அனைத்து ரோடுகளையும் புதியதாக போட ரூ.80 கோடி தேவை. அதை வழங்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள் ளேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை நகராட்சி கட்டிடம், மாநாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சின்னையாபுரம், ஜாபர்பாய் தோட்டம் பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள் கட்ட உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சில பணிகளை செய்ய காண்டிராக்டர்களுக்கான விதிமுறைகள் கடினமாக உள்ளன. இதனால் அவர்கள் பணிகளை எடுக்க தயங்குகின்றனர். எனவே விதிமுறைகளை எளியதாக மாற்ற கூறியுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது மத்திய அரசு நிதி ரூ.100 கோடி, மாநில அரசின் நிதி ரூ.60 கோடி என ரூ.160 கோடி உள்ளது.

பிரெஞ்சு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்தின்கீழ் 84 இடங்களில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க உள்ளோம். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. வார்டு மறுசீரமைப்பு முடிவடைந்ததும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும். இந்த பணிகளை இன்னும் 3 அல்லது 4 மாதத்துக்குள் முடித்துவிடுவோம். புதுவை மாநிலத்திலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மேலும் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மத்திய அரசிடம் புகார் கூறி உள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் மூலம் வணிக உரிமம் பெறும் வசதி - அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்
ஆன்லைன் மூலம் வணிக உரிமம் பெறும் வசதியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.