மாவட்ட செய்திகள்

பிட்காயின் பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடி; 5 பேர் கைது + "||" + Rs 31 lakh scam in Trichy in Bitcoin name Five arrested

பிட்காயின் பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடி; 5 பேர் கைது

பிட்காயின் பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடி; 5 பேர் கைது
‘பிட்காயின்’ பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,

பல்வேறு நாடுகளில் ‘பிட்காயின்’ (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வந்தாலும், இந்தியாவில் இந்த பிட்காயின் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆன்-லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி, இந்தியா முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து ‘பிட்காயின்’ பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக மதுரையை சேர்ந்த தம்பதி உள்பட 5 பேர் மீது கோபிச்செட்டிப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மோசடி பேர்வழிகளான மதுரையை சேர்ந்த ராஜதுரை-சுவேதா தம்பதி்யை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அதே தம்பதி திருச்சியிலும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஒருவரிடம் ரூ.31 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்துள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் முருகேசன் (வயது 30). திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகே ராஜதுரை-சுவேதா தம்பதி நடத்தி வரும் ‘பிட் டூ பி.டி.சி. ஸ்டாக்கீஸ்ட் மார்ட்’ என்ற ஆன்-லைன் நிறுவனத்தில் ஏஜண்டாக பொன்னமராவதி அருகே உள்ள புலவனார்க்குடியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் உள்ளார். இவர் ஆலவயல் கிராமத்தில் சிங்கப்பூர் மெடிக்கல் என்ற பெயரில் மருந்துகடை நடத்தி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முருகேசனை, கார்த்திக் சந்தித்து திருச்சியில் இயங்கும் ஆன்-லைன் வர்த்தக தொழிலில் பெருந்தொகையை முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும் என்றும், இதனால், அதிக வருவாய் ஈட்டலாம் எனவும் ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். மேலும் ராஜதுரை-சுவேதா ஆகியோருடன் சேர்ந்து டெல்லியை சேர்ந்த சிம்ரன் கபூர், மத்தீப் கபூர், மரியசெல்வம் இருந்து வருவதாகவும், அதில் குட்டிமணி, கணேசன், தங்கராஜ் ஆகியோர் ஏஜெண்டுகளாக இருந்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் ரூ.700 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.50 வரை லாபம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினார்.

கார்த்திக் பக்கத்து ஊர்க்காரர் என்பதால், அவரது வார்த்தையை நம்பிய முருகேசன், திருச்சியில் இயங்கி வரும் ஆன்-லைன் வணிக நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து ராஜதுரையிடம் ரூ.36 லட்சத்து 40 ஆயிரம் முதலீடு செய்தார். முதல் தவணையாக கமிஷன் தொகை ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்தை முருகேசன் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு எவ்வித கமிஷன் தொகையையும் அந்த வர்த்தக நிறுவனம் முருகேசனுக்கு வழங்கவில்லை.

பின்னர் இதுகுறித்து கார்த்திக்கை சந்தித்து முருகேசன் கேட்க, அந்நிறுவனத்தை பூட்டிவிட்டு ராஜதுரை-சுவேதா மற்றும் அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. எனவே, தனக்கு வரவேண்டிய ரூ.31 லட்சத்து 15 ஆயிரத்தை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் முருகேசன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜதுரை, சுவேதா மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் மீது தொழில்நுட்ப குற்றம் (ஐ.டி. ஆக்ட்) மற்றும் 420, 417, 406 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் நேற்று நாமக்கல் மாவட்டம் கொசவப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (43), புலவனார்க்குடியை சேர்ந்த கார்த்திக், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வால்மால் பாளையத்தை சேர்ந்த குட்டிமணி (31), கணேசன் (47), தங்கராஜ் (36) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளி களான ராஜதுரை, சுவேதா மற்றும் மரியசெல்வம், சிம்ரன் கபூர், மத்தீப் கபூர் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. “அறவழியில் போராட வந்தவர்கள் கைது” - பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கண்டனம்
அறவழியில் போராட வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
2. மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; தந்தை கைது
வேதாரண்யம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர்.
3. திருக்கோவிலூர் அருகே பரபரப்பு பள்ளி மாணவியை கடத்தி மகனுக்கு திருமணம் தாய்-தந்தை கைது
திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்-தந்தையை போலீசார் கைது செய்தனர்.
4. கடனை திருப்பி கொடுக்காததால் சாராய வியாபாரி வெட்டிக்கொலை 5 வாலிபர்கள் கைது
மரக்காணத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சாராய வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
5. பெத்தநாயக்கன்பாளையத்தில் கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
பெத்தநாயக்கன்பாளையத்தில் கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.