அனுமதி இன்றி கட்டிய அடுக்குமாடி கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பெரம்பூர்,
சென்னை மண்ணடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர், அதே பகுதியில் 350 சதுர அடியில் தரைதளத்தில் கார் நிறுத்தும் இடத்துடன், 2 மாடி வீடு கட்ட சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கி இருந்தார்.
ஆனால் தரைதளத்தில் கார் நிறுத்தம் இடம் இல்லாமல் கூடுதலாக 50 சதுர அடியை சேர்த்து 400 சதுர அடியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டல அதிகாரி லாரன்ஸ் உத்தரவின்பேரில் நேற்று மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
‘சீல்’ வைப்பு
அதில் கூடுதலான கட்டிடத்துக்கு வரைபட அனுமதி பெறாமல் கட்டி வருவது தெரிந்தது. அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டியது உறுதியானதால் அந்த கட்டிடத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதையொட்டி வடக்கு கடற்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.