மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில், பருத்தி விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு + "||" + In Namakkal, Cotton growers roadblock - Traffic impact

நாமக்கல்லில், பருத்தி விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்லில், பருத்தி விவசாயிகள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்லில் உரிய நேரத்தில் ஏலம் நடைபெறாததால் பருத்தி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வியாழக்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

அதேபோல் நேற்று நடந்த ஏலத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதற்கிடையே ஏற்கனவே ஏலத்தில் எடுக்கப்பட்ட சில பருத்தி மூட்டைகள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து மாயமானதாக கூறி பிற்பகல் 1½ மணி வரை வியாபாரிகள் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதுகுறித்து விவசாயிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவு விற்பனை சங்கம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய நேரத்தில் ஏலத்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் ஏலத்தில் வெளிப்படை தன்மை இல்லாததால் பருத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும், அதனால் விவசாயிகளுக்கு ந‌‌ஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து பருத்தி ஏலம் வழக்கம்போல் நடந்தது. இதனால் நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.