மாவட்ட செய்திகள்

கோவையில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை - முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு + "||" + Venture in Coimbatore: Couple ties the 100-pound jewelry robbery

கோவையில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை - முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு

கோவையில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை - முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு
கோவையில் தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை,

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு பாரிநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ரொசாரியோ (வயது 60). இவர் கணபதியில் லேத்பட்டறை நடத்தி வந்தார். தற்போது அந்த பட்டறை மூடப்பட்டுவிட்டது. இவருடைய மனைவி எலிசபெத் மேரி (55). இவர் சுங்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். மேலும் இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தரை தளத்தில் உள்ள படுக்கை அறையில் படுத்து தூங்கினர். மேல்தளத்தில் ரொசாரியோவின் தந்தை லூர்துசாமி (90), வேலைக்கார பெண் தெரசா ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்தபடி 4 மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த ரொசாரியோ எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் முகமூடி அணிந்தபடி 4 மர்மநபர்கள் நின்றனர்.

உடனே அந்த மர்ம கும்பல் கத்திமுனையில் ரொசாரியோவை மிரட்டி வீட்டில் பணம், நகை எங்கு வைத்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் ‘வீட்டில் உள்ளவர்களை கொன்றுவிட வேண்டாம் என்றும் வீட்டில் உள்ள பணம், நகையை தந்துவிடுவதாகவும்’ கூறியதாக தெரிகிறது.

பின்னர் அந்த கொள்ளையர்கள் ரொசாரியோ போர்த்தி இருந்த படுக்கை விரிப்பை கத்தியால் கிழித்து அவரது கைகால்களை கட்டி, வாயிலும் துணியை திணித்துள்ளனர். இதற்கிடையில் சத்தம் கேட்டு எலிசபெத் மேரி வெளியே வந்தார். அவரையும் கொள்ளை கும்பல் கட்டிப்போட்டது.

பின்னர் மர்மநபர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், 1¼ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். தொடர்ந்து தங்களை போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக தம்பதியிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்தனர்.

அப்போது செல்போனில் தங்களது பேரக்குழந்தைகளின் படங்கள் இருப்பதாகவும், எனவே செல்போன்களை தந்துவிடுமாறும் தம்பதியினர் கெஞ்சி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த செல்போன்களை வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் மேரி எலிசபெத் தனது கைகளில் கட்டப்படிருந்த கட்டுகளை அவிழ்த்துகொண்டு, கணவரின் கட்டுக்களையும் அவிழ்த்தார். பின்னர் இந்த கொள்ளை குறித்து அக்கம் பக்கத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து கோவை ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒரு ஆசாமி ஆங்கிலத்தில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வீட்டின் மேல் தளத்தில் தங்கி உள்ள லூர்துசாமி, வேலைக்கார பெண் தெரசா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளும் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. இதனால் அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். இதில் தொடர்புடைய கொள்ளையர்களும் இன்னும் கைதாகவில்லை. இந்த நிலையில் தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை