மாவட்ட செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு: பஸ்-ரெயில்கள் ஓடவில்லை; கடைகள், ஓட்டல்கள் அடைப்பு - முடங்கியது கோவை + "||" + Curfew to control Corona: Bus-trains do not run; Shops, hotels, shutters - crippled Coimbatore

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு: பஸ்-ரெயில்கள் ஓடவில்லை; கடைகள், ஓட்டல்கள் அடைப்பு - முடங்கியது கோவை

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு: பஸ்-ரெயில்கள் ஓடவில்லை; கடைகள், ஓட்டல்கள் அடைப்பு - முடங்கியது கோவை
கொரோனாவை கட்டுப்படுத்த நடந்த ஊரடங்கால் பஸ்-ரெயில்கள் ஓடாததாலும், கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டதாலும் கோவை முடங்கியது.
கோவை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி கோவையில் சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் கோவை கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, நஞ்சப்பா சாலை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரிய கடை வீதி, ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்பட கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.

இதனால் கோவையில் மயான அமைதி நிலவியது. சாலைகளில் உள்ள ஒரு சில சிக்னல்கள் மட்டும் இயங்கின. அங்கு மட்டும் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர். பெரும்பாலான சிக்னல்கள் செயல்படவில்லை. கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் மட்டும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மற்ற இடங்களில் போலீசாரை பார்க்க முடியவில்லை. ஒரு சில போலீஸ் ரோந்து வாகனங்கள் மட்டும் சாலையில் சென்றது.

கோவையில், முழுஅடைப்பு போன்ற சமயங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். பஸ்கள் ஓடாது. ஆனால் சொந்தமாக கார், இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சாலைகளில் வலம் வருவார்கள். ஆனால் நேற்று அது போன்று யாரும் சாலைகளில் வரவில்லை.

கொரோனா வைரஸ் பீதியினால் மக்கள் வெளியில் வருவதை முழுவதுமாக தவிர்த்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி, உக்கடம் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளில் ஆதரவற்றவர்கள் படுத்திருப்பார்கள். ஆனால் அவர்களையும் நேற்று காணமுடியவில்லை. முன்தினமே அவர்களை கோவை மாநகராட்சி பணியாளர்கள் அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்தனர்.

கோவையில் பஸ் மற்றும் லாரிகள் ஓடாததால் அனைத்து டெப்போக்களிலும் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் சொந்த ஷெட்களில் நிறுத்தப்பட்டன. லாரிகள் உக்கடம் லாரி பேட்டையிலும், ஆம்னி பஸ்கள் காந்திபுரத்தில் உள்ள பஸ் நிலையம், மத்திய சிறை வளாகம் உள்பட பல தனியார் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புறநகர் பகுதிகளில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் கோவை ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதேபோல கோவை விமான நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோவை பூமார்க்கெட், எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.தொழில் நகரமான கோவையில் நேற்று ஊரடங்கு அறிவிப்பையொட்டி எந்த தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. எப்போது பரபரப்பாக இயங்கும் கோவை மாவட்டம் நேற்று முற்றிலுமாக முடங்கியது.

இதே போல கோவை குற்றாலம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் அடைக்கப்பட்டிருந்தன. கோவையின் எல்லை பகுதியான வாளையாறு, அட்டப்பாடி உள்பட 14 சோதனை சாவடிகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லைப்பகுதியில் உள்ள சோதனைசாவடியில் போலீசார் 24 மணி நேரமும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.