மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வெளியே நடமாடினால் கட்டாய தனிமைப்படுத்தும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை + "||" + People from abroad Forced isolation when walking outside They will be confined to shelters

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வெளியே நடமாடினால் கட்டாய தனிமைப்படுத்தும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வெளியே நடமாடினால் கட்டாய தனிமைப்படுத்தும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வெளியே நடமாடினால் கட்டாய தனிமைப்படுத்தும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,

ஊரடங்கு உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் நேற்று ஏராளமானோர் அங்குமிங்குமாக சுற்றி திரிந்தனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து ஹெலிகேமராக்கள் வானில் பறக்க விடப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் இருக்கிறதா? என்று போலீசார் கண்காணித்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்து, மக்கள் கூட்டத்தை கண்காணித்தார்.

அப்போது 4 ஹெலிகேமராக்கள் பறக்க விடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஒரு கேமரா வடசேரி காய்கறி சந்தை பகுதியையும், ஒரு கேமரா பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பகுதியையும், ஒரு கேமரா வடசேரி சந்திப்பு பகுதியையும், ஒரு கேமரா ஆம்னி பஸ் நிலைய பகுதியையும் படம் பிடித்தது.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் முக்கியமான சோதனைச் சாவடிகள், சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து தடை உத்தரவை மீறி யாராவது வெளியில் வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தனர். அப்போது டாக்டர்கள், நர்சுகள், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு படையினர், பாராமெடிக்கல் ஊழியர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் சாலைகளில் சென்றுவர அனுமதிக்கப்பட்டனர். அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக குமரி மாவட்டத்தில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தின் கேரள மாநில எல்லையில் 10 சோதனைச்சாவடிகளில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைச் சாவடிகள் வழியாக அனைத்து சரக்கு வாகனங்களும் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. சரக்கு இருந்தாலும், காலியாக இருந்தாலும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அதேநேரத்தில் பொதுமக்கள் சென்றுவர அனுமதி இல்லை. பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில்தான் இருக்க வேண்டும். குமரி- நெல்லை மாவட்ட எல்லையிலும் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வருவதற்கோ, குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்துக்குச் செல்வதற்கோ மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இளைஞர்கள் நிறையபேர் மருந்துக்கடைகளுக்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டு அங்குமிங்குமாக சுற்றித்திரிகிறார்கள். அவ்வாறு அவர்கள் சுற்றித்திரியக்கூடாது. வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

கேரள எல்லையில் நமக்கு 10 சோதனைச் சாவடிகள் உள்ளன. அதுதவிர எல்லையோரம் சிறிய, சிறிய சாலைகள் நிறைய உள்ளன. அந்த சாலைகள் அனைத்தையும் பேரிகாட் அமைத்து சீல் வைத்துள்ளோம். 10 சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகள் என்ற முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முக்கியமாக களியக்காவிளை சோதனைச்சாவடி, ஊரம்பு சோதனைச்சாவடி, காக்கவிளை சோதனைச் சாவடி, நீரோடித்துறை சோதனைச்சாவடி, நெட்டா சோதனைச்சாவடி, சிறியகொல்லா சோதனைச்சாவடி, கோழிவிளை சோதனைச்சாவடி போன்றவற்றில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஒரு ஷிப்டுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சரக்கு வாகனங்கள் மட்டும் இந்த சோதனைச்சாவடிகள் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.

கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கடல் வழியாக குமரி மாவட்டத்துக்கு வருவதை கண்காணிப்பதற்காக அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களில் இருசக்கர வாகன ரோந்து போலீசாரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க யார் எங்கே இருக்கிறீர்களோ? அங்கேயே இருங்கள். எனது வீட்டுக்குப் போகிறேன், ஊருக்குப் போகிறேன் என்று கூறி வெளியில் வராதீர்கள் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று டாக்டர்களும், மாவட்ட நிர்வாகமும் கூறியுள்ளது. அதை அவர்கள் கடைபிடித்து குறிப்பிட்ட நாட்கள் வரை வெளியில் வரக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதையும் மீறி அவர்கள் வெளியில் நடமாடினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு அரசால் கண்டறியப்பட்டுள்ள கட்டாய தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு கொண்டுபோய் அடைக்கப்படுவார்கள். அதன்பிறகு அவர்களால் குறிப்பிட்ட நாட்கள்வரை வெளியே வரமுடியாத நிலை ஏற்படும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவர்கள் என 3600 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்துதல் பற்றிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி மற்றும் கண்காணிப்பு பணியை காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.