மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல் + "||" + Ariyalur District, 731 people isolated and monitored - Collector Information

அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 204 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் ரத்னா அரியலூர் பேரிடர் மேலாண்மை தாசில்தார்களிடம் நேற்று வழங்கினார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்த பொருட்கள் அந்தந்த முகாம்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கலெக்டர் ரத்னா கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தத்தனூரில் ஒரு கல்லூரியில் உள்ள முகாமில் 62 பேரும், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முகாமில் 73 பேரும், அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முகாமில் 42 பேரும், ஜெயங்கொண்டத்தில் ஒரு கல்லூரியில் உள்ள முகாமில் 11 பேரும், ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முகாமில் 16 பேரும் என மொத்தம் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சோப்பு, சேலை, கைலி, பாய், தலையணை, போர்வை, பற்பசை, சீப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வாகனம் மூலம் அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மூன்று வேளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சாத்தமங்கலம், கோவில் எசனை, தாமரைக்குளம், சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 290 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. அவர்களும் மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மருத்துவக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டவர்களை, அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி தினமும் அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்திற்கு இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த மொத்தம் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077, 104 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து சமூக முக்கியஸ்தர் களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரத்னா பேசுகையில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.