மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல் + "||" + In the Nilgiris district, 373 No Coronal Impact on Pregnant Women - Collector Information

நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர பிற நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) முதல் துணிக்கடைகள் உள்பட அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம். ஏ.சி. இல்லாத சிறிய துணிக்கடைகள் அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் இயங்க அனுமதி இல்லை.

சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணித்து அபராதம் விதிக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இருந்து நீலகிரி வருகிறவர்களுக்கு சளி மாதிரி பரிசோதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர 813 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அரசு கட்டுப்பாட்டு அறையில் அதற்கான அனுமதி பெற்று வரலாம். வெளிமாநில இ-பாஸ் இருப்பதுடன், தமிழக அரசின் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வந்தால் சளி மாதிரி பரிசோதிக்கப்படுவதுடன், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் கட்டாயம் தங்க வைக்கப்படுவார்கள். வடமாநில தொழிலாளர்கள் 1,941 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அழைத்ததால் 40 பேர் மிசோரம், மேகலாயா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களில் இருந்து வந்து உள்ளனர் என்று கண்காணிப்பு அதிகாரிகள் விவரங்கள் சேகரிக்கின்றனர்.

அம்மாநில அரசுகள் நாங்கள் அவர்களை அழைத்து கொள்கிறோம் என்று அனுமதி தெரிவித்தால், தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூட வேண்டாம். நீலகிரியில் பிரசவிக்கும் தருவாயில் உள்ள கர்ப்பிணிகள் 373 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு கடன்கள் வழங்க புதியதாக 188 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.