மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக உண்டியலில் சேமித்த தொகையை போலீசிடம் வழங்கிய அண்ணன்-தங்கை + "||" + brother-sister gave the police the sum of money saved

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக உண்டியலில் சேமித்த தொகையை போலீசிடம் வழங்கிய அண்ணன்-தங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக உண்டியலில் சேமித்த தொகையை போலீசிடம் வழங்கிய அண்ணன்-தங்கை
கூடலூரை சேர்ந்த அண்ணன்-தங்கை தாங்கள் உண்டியலில் சேமித்த தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக வழங்கினார்கள்.
கம்பம், 

கூடலூர் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் அழகேசன். இவர் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தன்னார்வலராக இருந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இதைப் பார்த்த அவருடைய மகன் ஜெயரூபன், மகள் ஸம்ரிதா ஆகியோர் தங்களின் உண்டியல் சேமிப்பு பணத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக வழங்க முன்வந்தனர். இதில் ஜெயரூபன் 6-ம் வகுப்பும், ஸம்ரிதா 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஸம்ரிதா தனது அண்ணனுடன் சேர்ந்து உண்டியலில் பணம் சேமித்து வந்தார். அந்த பணத்தை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாம் என்று ஸம்ரிதா கூறியுள்ளார். கம்பம் பகுதியில் ஏற்கனவே போலீசார் மூலம் ஏழை, எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவதை அறிந்த அண்ணன்-தங்கை இருவரும் போலீசாரிடம் தங்களின் பணத்தை ஒப்படைக்க விரும்பினர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களின் தந்தை அழகேசன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் விவரத்தை தெரிவித்தார். உடனே அவரும் அங்கிருந்த போலீசாரும் அந்த சிறுவர், சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து பணத்தை பெற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களின் உண்டியல் சேமிப்பு தொகை ரூ.4 ஆயிரத்து 683-ஐ போலீசாரிடம் வழங்கினர். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட போலீசார் அதை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மாவட்ட சாரண-சாரணியர் இயக்க செயலாளர் பாண்டியிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தன்னார்வலர்கள் அந்த அண்ணன், தங்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.