மாவட்ட செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைந்தது - புழல், செம்பரம்பாக்கம் கைகொடுக்கும் என நம்பிக்கை + "||" + Provide drinking water to Chennai Of Boondi Lake Water reserves are low Puzhal, Chembarambakkam Confidence in hand giving

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைந்தது - புழல், செம்பரம்பாக்கம் கைகொடுக்கும் என நம்பிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைந்தது - புழல், செம்பரம்பாக்கம் கைகொடுக்கும் என நம்பிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு வெறும் அரை டி.எம்.சி.யாக குறைந்து உள்ளது. இருப்பினும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் கைகொடுக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை, 

சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. இந்த நீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதுதவிர வீராணம் ஏரி மற்றும் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்தும் குடிதண்ணீர் பெறப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருவதால் குடிநீரின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வினியோகித்து வருகிறது.

ஏரிகளின் நீர் ஆதாரத்தை பொறுத்த வரையில் தமிழக அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வருகிறது. மீதம் உள்ள 3 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை தண்ணீர் மூலம் நிரம்புகின்றன. கடந்த ஆண்டு பருவ மழை ஓரளவு பெய்ததால் இந்த ஏரிகளில் சராசரியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 7 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது தேவை அதிகரித்து வருவதால் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது ஒரு புறம் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் ஆவியாவது போன்ற காரணங்களால் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.

குறிப்பாக நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 501 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 882 மில்லியன் கன அடி (2.8 டி.எம்.சி.), சோழவரத்தில் 72 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 1,893 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) என 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 348 மில்லியன் கன அடி (5.3 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது.

குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 331 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 138 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 75 கன அடி வீதம் தினசரி திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.

குறிப்பாக பூண்டி ஏரியில் 501 மில்லியன் கன அடி அதாவது அரை டி.எம்.சி. மட்டுமே இருப்பு உள்ளது. இருந்தாலும் புழல் மற்றும் செம்பரம்பாக்கத்தில் போதுமான தண்ணீர் இருப்பதால் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு அவை கைகொடுக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 112 மில்லியன் கன அடிமட்டுமே தண்ணீர் இருந்தது என்று குடிநீர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.