மாவட்ட செய்திகள்

மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்; டிரைவர் பலி + "||" + 3 trucks clash near Maduravoyal successively; Driver Killed

மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்; டிரைவர் பலி

மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்; டிரைவர் பலி
மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் தண்ணீர் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து வந்த லாரி, சாலையின் வலது புறம் திரும்பிக் கொண்டிருந்தது. இதனால் அதன் பின்னால் ஜல்லி ஏற்றி வந்த லாரி சாலையில் நின்று கொண்டிருந்தது.

இவற்றுக்கு பின்னால் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருந்து தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது மோதியது. அந்த லாரி முன்னால் திரும்பிகொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 லாரிகள் சங்கிலி தொடர்போல் மோதிக்கொண்டதில் தண்ணீர் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. மற்ற 2 லாரிகளும் சேதம் அடைந்தன.

இதில் தண்ணீர் லாரியை ஓட்டிவந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் ஆரோக்கிய டான்போஸ்கோ(வயது 42) என்பவர் இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அடுத்தடுத்து மோதி சேதமடைந்த 3 லாரிகளையும் கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பலியான தண்ணீர் லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...