மாவட்ட செய்திகள்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு + "||" + Villupuram, Kallakurichi district 2 deaths to Corona

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3,595 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 35 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதுவரை 2,640 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 920 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே காணையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த அதே கிராமத்தை சேர்ந்த 64 வயதுடைய நகை மதிப்பீட்டாளர், காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் கடந்த 28-ந்தேதி முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 169 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,764 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 155 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 620 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 25-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகள், தொடர்பில் இருந்தவர்கள் என 415 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 19 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 745 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு 2 பேர் சாவு - விழுப்புரத்தில் 84 பேருக்கு தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. மதுரை, ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
மதுரை, ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.