பொது போக்குவரத்துக்கு அனுமதி: தஞ்சை மாவட்டத்தில், 250 பஸ்கள் இயக்கம்


பொது போக்குவரத்துக்கு அனுமதி: தஞ்சை மாவட்டத்தில், 250 பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2020 10:00 PM GMT (Updated: 1 Sep 2020 1:21 AM GMT)

பொது போக்குவரத்துக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 250 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்,

கொரானா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தமிழக அரசு புதிய தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதற்காக தஞ்சை கரந்தை மற்றும் ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்து பணிமனையில் உள்ள பஸ்கள் பராமரிப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. பஸ் நிலையங்கள், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் காமராஜர் மார்க்கெட் மொத்த வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். அங்கு வெங்காய மூட்டைகள், வாழைத்தார், உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுவதால் நேற்று மதியத்துக்குப்பிறகு காய்கறி, வெங்காய மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து மொத்தம் 560 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 250 பஸ்கள் இன்று முதல் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கூட்டத்தை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும். பஸ்களில் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

Next Story