மாவட்ட செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை - தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு + "||" + ADMK participates in Trichy Srirangam The crowd threw chairs at the crowd and chanted as the volunteers dispersed

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை - தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை - தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீசி ரகளை செய்தவர்களால் தொண்டர்கள் சிதறி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மேடையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், அண்ணாவி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட நிர்வாகிகள் இருந்தனர். அப்போது திடீரென 100 பேர் கையில் மஞ்சள் நிற கொடி பிடித்தபடி மேடையை நோக்கி வந்தனர்.

அவர்கள் மேடையின் முன்பகுதியில் கோஷம் போட்டுக் கொண்டே நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை செய்தனர். இதனால் முன்பகுதியில் இருந்த தொண்டர்கள் உள்பட அனைவரும் எழுந்து சிதறி ஓடினார்கள். சம்பவம் நடந்தபோது மண்டபத்திற்குள் போலீசார் இல்லை.

அமைச்சர் வளர்மதியின் பாதுகாப்பு அதிகாரி அவர் மீது நாற்காலிகள் வந்து விழாமல் பார்த்துக் கொண்டார். ரகளை செய்தவர்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து வெளியே ஓடினார்கள்.

இந்த ரகளையால் பல நாற்காலிகள் உடைந்தன. அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் அன்பரசன் தாக்கப்பட்டார். சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் கண்ணதாசனுக்கு ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக நாற்காலிகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், கண்ணதாசன், அவரது உறவினர் திலீப் உள்பட 100 பேர் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147, 448, 294(பி), 323, 427, 149, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.