மாவட்ட செய்திகள்

“இப்போது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது”: பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் தலைமையில் குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Collector-led team to remove encroachments in Palani - Madurai High Court directive

“இப்போது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது”: பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் தலைமையில் குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

“இப்போது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது”: பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் தலைமையில் குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பழனி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பழனி நகரை காப்பாற்ற இப்போது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது எனவும் கருத்து தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஸ்ரீதர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை,

பழனி நகரின் மையப்பகுதியில் ரெயில்வே பீடர் சாலை அமைந்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீளமும், 23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் வடிகாலுடன், நடுவில் பூங்கா மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய வகையில் சாலை அமைக்கப்படுகிறது. சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள், மரங்கள், சிறிய கோவில்கள் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இந்த சாலையில் உள்ள பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த சிலையை அகற்றாமல் வடிகால் பணிகளை தொடங்கினால் முழுமையாக முடிக்க முடியாது. எனவே பெரியார் சிலையை அகற்றிவிட்டு, அதன்பின் சாலை விரிவாக்கப்பணியை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல நெய்க்காரப்பட்டியை சேர்ந்த துளசிதுரை, பழனி நகர் ரெயில்வே பீடர் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக அங்கு உள்ள விநாயகர் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பழனி நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. எனவே அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் என்பவர் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 1999-ம் ஆண்டு நகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றி தான், ரெயில்வே பீடர் சாலையில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த சிலையால் எந்த இடையூறும் இல்லை” என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு, பெரியார் சிலை அமைந்திருக்கும் பகுதியில் விபத்துகள் நடக்கவும், அதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிகிறது. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது குறித்து பழனி நகராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், “அதிகாரிகளுக்கு இடையே போதுமான ஒற்றுமையின்மை மற்றும் தகவல் பரிமாற்ற இடைவெளி காரணமாகவே தற்போது வரை பழனி நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது பழனி நகரை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற இப்போது செய்யவில்லை என்றால், எதிர்காலத்திலும் எதுவும் செய்ய இயலாது. எனவே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து, பழனி நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.