மாவட்ட செய்திகள்

உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது + "||" + The corona test was conducted in 2 phases on 12,500 elderly people in Kumari to control mortality

உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது

உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது
குமரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்காக 2 கட்டமாக 12,500 முதியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் முதலில் நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் மணிக்கட்டிபொட்டல் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் அதன் பிறகு வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக காய்கறி சந்தை மூலமாக கொரோனா பரவ தொடங்கியது.

அங்கு வியாபாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் சந்தைக்கு வந்து சென்றவர்கள் என அடுத்தடுத்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. நாள் ஒன்றுக்கு 200 பேர் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு

எனினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஓரிரு தினங்களை தவிர பெரும்பாலான நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90-க்குள்ளேயே இருந்து வருகிறது.

ஆனால் கொரோனா காரணமாக அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 251 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். எனவே இறப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு சர்க்கரை நோயாளிகளும், ரத்த அழுத்தம் உள்ளவர்களும் அதிகளவில் பலியாவது தெரிய வந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 8 ஆயிரம் பேருக்கு சுகாதாரத்துறை மூலமாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பணிகள் 2 வாரங்கள் வரை நடந்தது. இந்த பரிசோதனையில் சுமார் 180 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த வாரம் 2-ம் கட்ட பரிசோதனை நடந்தது. இந்த முறை 60 வயதை தாண்டிய அனைத்து முதியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் 4,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதாவது குமரி மாவட்டத்தில் 2 கட்டமாக மொத்தம் 12 ஆயிரத்து 500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. 3-ம் கட்டமாகவும் பரிசோதனை நடைபெற உள்ளது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த வரையில் 5 நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலமாக தினமும் 600 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கட்டாய முக கவசம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களை உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்ததால் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் வரும் நாட்களில் அனைத்து மக்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜாண்போஸ்கோ ராஜன் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது. முக கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 85 சதவீத மக்கள் முக கவசம் அணிகிறார்கள். ஆனால் மீதமுள்ள மக்கள் முக கவசம் அணிவதில்லை. அபராதம் விதித்துவிடுவார்கள் என்ற பயத்தில் முக கவசம் அணிவதை விட்டுவிட்டு தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முக கவசம் அணிய வேண்டும். இதே போல சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு அடிக்கடி கைகளை கழுவி கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்“ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 72 பேர் குணமடைந்தனர் மேலும் 58 பேருக்கு பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்தனர். மேலும், நேற்று 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து, இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது.
3. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.