மேலும் 8 சிறப்பு ரெயில்கள் 11-ந்தேதி முதல் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு + "||" + 8 more special trains Central Railway announcement of operation from 11th
மேலும் 8 சிறப்பு ரெயில்கள் 11-ந்தேதி முதல் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு
மராட்டியத்தில் மேலும் 8 சிறப்பு ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
மும்பை,
கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு தளர்வு காரணமாக மராட்டியத்திற்குள் ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய ரெயில்வே 5 சிறப்பு ரெயில்களை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்க அனுமதி அளித்து உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று புதிதாக அறிவிப்பு ஒன்றை மத்திய ரெயில்வே வெளியிட்டது. இதில் மராட்டியத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் புதிதாக மேலும் 8 சிறப்பு ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ரெயில்கள்
இதன்படி புனே-அஜ்னி இடையே 2 ரெயில்கள், மும்பையில் இருந்து கோலாப்பூர், லாத்தூர், நாந்தெட் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு சிறப்பு ரெயில், புனேயில் இருந்து நாக்பூர், அமராவதி ஆகிய இடங்களுக்கு தலா ஒரு சிறப்பு ரெயில், கோலாப்பூர்-கோண்டியா இடையே ஒரு ரெயில் என 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
புனேயில் இருந்து அஜ்னி, அமராவதி, நாக்பூர் இடையே இயக்கப்படும் ரெயில்கள் ஏ.சி. ரெயில்களாக வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். மும்பை-லாத்தூர் இடையே செல்லும் ரெயில் சூப்பர் பாஸ்டாக வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும். மற்ற ரெயில்கள் தினமும் இயங்கும்.
புறநகர் ரெயில்கள்
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதைத்தவிர புனே-லோனாவாலா இடையே சிறப்பு புறநகர் ரெயில்கள் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக வருகிற 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.