மாவட்ட செய்திகள்

திரைமறைவு வேலைகளை தொடங்கின: சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி அரசியல் கட்சிகள் + "||" + Behind the scenes work began: Puducherry political parties preparing for the Assembly elections

திரைமறைவு வேலைகளை தொடங்கின: சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி அரசியல் கட்சிகள்

திரைமறைவு வேலைகளை தொடங்கின: சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி அரசியல் கட்சிகள்
சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதுவையில் அரசியல் கட்சிகள் இப்போதே திரைமறைவு வேலைகளை தொடங்கி விட்டன.
புதுவை,

புதுவை அரசியல் முற்றிலும் மாறுபட்டது. அதாவது மற்ற மாநிலங்களில் அடிப்படையில் 75 சதவீதம் கட்சிக்கான வாக்குகளாக இருக்கும். மீதி வேட்பாளர்களின் செல்வாக்கு, அவருக்கான நல்ல பெயர் போன்றவை வெற்றி வாய்ப்புக்கு அடித்தளமாக அமையும்.

ஆனால் புதுவை அரசியலில் இது தலைகீழ். அரசியல் கட்சிக்கான செல்வாக்கு என்பது மிகமிகக் குறைவு. கட்சி ஓட்டு என்பது 10 முதல் 25 சதவீதமே இருக்கும். வேட்பாளரின் சமூக செயல்பாடு, மக்கள் சேவை போன்ற தனிநபர் செல்வாக்கு தான் வெற்றியை நிர்ணயிக்கும்.

இந்த அடிப்படையில் புகழ்பெற்ற தனிநபர்களை இழுப்பதில் அரசியல் கட்சிகள் போட்டி போடுவது வழக்கம். அப்படிப்பட்ட நபர்களும் தங்களை நடுநிலையாளராக காட்டிக்கொண்டு தேர்தல் நெருங்கும் வேளையில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் ஐக்கியமாவது வாடிக்கை.

அதேநபர் அடுத்த தேர்தல் வரை குறிப்பிட்ட அதே கட்சியில் நீடிப்பாரா? என்பதும் சந்தேகம்தான்.

அப்படி கொள்கை பிடிப்போடு பல ஆண்டுகளாக ஒரே கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பு வகிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். புதுச்சேரியில் ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைமை தான் உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே புதுவையில் தேர்தல் ஜூரம் தொற்றிக் கொள்வது வழக்கம். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிறந்தநாள் கொண்டாட்டம், விழாக் காலங் களில் தொகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது என காய் நகர்த்தி அரசியல் சதுரங்க ஆட்டத்தை தொடங்கி விடுவது புதுவையின் கடந்த கால வரலாறு.

ஆனால் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா காரணமாக தற்போது தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை.

புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. போன்றவை பிரதான கட்சிகளாக உள்ளன. கம்யூனிஸ்டு, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், ஆம்ஆத்மி, தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. எத்தனை கட்சிகள் இருந்தாலும் கூட்டணி தலைமை வகிப்பதில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் தான் முன்னணியில் உள்ளன.

தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சட்டமன்ற தேர்தலை இந்த கூட்டணியில் வேறு சில கட்சிகளும் சேர்ந்து சந்திக்க வாய்ப்பு உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றன. கடைசி கட்ட அரசியல் பரபரப்பில் இந்த கட்சிகள் இடம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த கூட்டணிகளை உறுதிப்படுத்த இப்போதே திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

அதாவது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர்களை அடிக்கடி பாராட்டி நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். காங்கிரசை பொறுத்தவரை அகில இந்திய தலைமைதான் கூட்டணியை இறுதி செய்யும்.

தற்போது கூட்டணியில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் அரசை விமர்சித்தாலும் இறுதியில் அந்த கட்சிகள் தலைமை எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படும். முன்னாள் எம்.பி. ப.கண்ணன் தலைமையிலான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு மாநில, தேசிய கட்சிகள் தேர்தல் நேரத்தில்தான் தங்களது முடிவுகளை அறிவிக்கும். அதுதவிர பெரும்பாலும் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு ஜெயித்தவர்கள் அடுத்த தேர்தலில் பிற கட்சி வேட்பாளராக போட்டியிடுவதும் புதுவைக்கு புதிதல்ல.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் இதுபோன்ற அரசியல் புயல் வீசும். ஒரே நாளில் கட்சியை விட்டு வெளியேறி அடுத்த நாளே மற்ற கட்சியின் வேட்பாளராக களம் காண்பதும் கடந்த கால அரசியல் சான்றுகள்.

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் வியூகம், கவர்ச்சி அறிவிப்புகள், சலுகை திட்டங்கள், வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என தங்களை தயார்படுத்தும் பணிகளை இப்போதே தொடங்கி விட்டன.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பொன்மொழிக்கேற்ப பொங்கல் பண்டிகை முடிந்ததும் எந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன. யார், யார்? கட்சி மாறப் போகிறார்கள் என்பது தெளிவாகி புதுவை அரசியல் களம் களைகட்டத் தொடங்கி விடும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை