சின்னசேலம் அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படும் பொதுமக்கள் + "||" + Chinnaselam In Arundhatiyar Colony The general public without basic amenities
சின்னசேலம் அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படும் பொதுமக்கள்
சின்னசேலம் பேரூராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட நயினார்பாளையம் செல்லும் சாலையின் மேற்குப் பகுதியில் அருந்ததியர் காலனி அமைந்துள்ளது.
சின்னசேலம் ,
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வீடற்ற 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. பேரூராட்சிக்கு வரி செலுத்திவரும் இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், தெரு விளக்கு, சாலை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பலன் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெய்துவரும் மழையால் குடியிருப்பை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் ஆத்திர அவசரத்துக்கு வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அப்படியே வெளியே வந்தாலும் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும்போது சேற்றில் சிக்கிக்கொள்ளும் அவல நிலையும் உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் டைபாய்டு, வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை இருப்பதாகவும், இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வில்லை. இதற்காக நாங்கள் ஆண்டுதோறும் போராடி வருகிறோம். எந்த பலனும் இல்லை. இதனால் எங்கள் குடியிருப்பு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள பகுதி என்பதால் அதிகாரிகள் எங்களை ஒதுக்கி விட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது. இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை, கழிவுநீர் கால்வாய், தெருமின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.