மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம் + "||" + Nammazhvar Motsam today at Srirangam Renganathar Temple

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 10-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார்.

அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தவாரி கண்டருளினார். பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்மாழ்வார் மோட்சம்

நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 4.30 மணிமுதல் இரவு 7 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனமும் கண்டருளினார். இரவு 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிமுதல் 6 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.