மாவட்ட செய்திகள்

மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி + "||" + We are ready to sacrifice our lives for the people: Puducherry Minister Kandasamy

மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி
மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். எத்தனை பேர் கட்சியை விட்டு ஓடினாலும் கவலையில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அமைச்சர் கந்தசாமி ஆவேசமாக கூறினார்.
தர்ணா போராட்டம்

3-வது நாளாக நேற்று நடந்த தர்ணா போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடி முதலில் எதிரியாக பார்ப்பது முதல்-அமைச்சரை தான். அடுத்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவை, 3-வது எதிரி நான் தான். அனைத்து உத்தரவுகளையும் சமூக வலைதளத்தில் அனுப்புகிறார் கவர்னர் கிரண்பெடி. அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரா? கவர்னரை நியமித்த ஜனாதிபதி தான் அதே பேனாவினால் கையெழுத்து போட்டு எங்களையும் நியமித்தார். புதுவைக்கு கவர்னர் என்ன பாதுகாப்பு கொடுத்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும். அதனை யாராலும் தடுக்க முடியாது. நான் சாகும் வரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன். காங்கிரஸ் கட்சியை விட்டு சென்ற பலர் தற்போது நடுரோட்டில் தான் இருக்கிறார்கள். அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவின் விழாவிற்கு செலவு செய்த பணத்தை ஏற்க முடியாது என கவர்னர் கூறியுள்ளார். 

தற்போது புதுவைக்கு அவரது பாதுகாப்பிற்கு துணை ராணுவம் வந்திருப்பதற்கு அவரது சொந்த பணத்தை தான் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.8 கோடி நிதியை கவர்னர் செலவு செய்கிறார்.

உயிர் தியாகம் செய்யவும் தயார்
கொரோனா காலத்தில் கவர்னர் தனது சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக்கொள்வதாக கூறினார். ஆனால் குறைத்துக்கொள்ளவில்லை. செலவுகளையும் குறைக்கவில்லை. ஆனால் அமைச்சர்கள் தங்கள் செலவுகளை குறைத்துக்கொண்டனர். முதல்-அமைச்சர், அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ஆகியோர் வீடு வீடாக சென்று கொரோனா நோயாளிகளை நேரில் சென்று சந்தித்தனர். கவர்னர் எங்கு சென்றார். காவல்துறையில் ஆயிரம் பதவிகளுக்கு மேல் காலியாக உள்ளது. அந்த பதவிகள் நிரப்பப்படவில்லை. இது படித்த இளைஞர்களை பழிவாங்கும் செயல்.

கவர்னர் திரும்ப போகும் வரை போராட்டம் நடத்த வேண்டும். பல உயிர்களை தியாகம் செய்துதானே நாம் சுதந்திரம் பெற்றோம். அதுபோல நாம் போராடுவோம். 10 பேரை கவர்னர் சுடுவாரா? சுட்டு கொல்லட்டும். மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். எத்தனை பேர் கட்சியை விட்டு ஓடினாலும் கவலையில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். எங்கள் 

திறமைகளை எல்லாம் வீணாக்கிவிட்டார் கவர்னர் கிரண்பெடி. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் விலகி செல்கிறார்களோ அவர்கள் செல்லாக்காசு தான். இங்கு இருந்தால் தான் ஹீரோ.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் கண்ணீர்

போராட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பேசியதாவது:-

கடந்த 4½ ஆண்டுகளாக புதுவை அரசு மக்களுக்கு செய்ய முயன்ற எல்லா திட்டங்களையும் கவர்னர் கிரண்பெடி தடுத்துவிட்டார். இது மக்களுக்காக நடத்தும் போராட்டம். கவர்னர் எந்த திட்டங்களையெல்லாம் மக்களுக்கு செய்ய விடாமல் தடுக்கிறார் என்பதை மத்திய அரசுக்கு சொல்வதற்காக நடத்தும் போராட்டம். ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை கொண்டு வந்தோம். 

ஆனால் எதற்கும் கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. ஏனாமில் பழமையான கோவிலை புனரமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நள்ளிரவில் கோவில் வேலையை செய்ய கூடாது என கவர்னர் உத்தரவிடுகிறார்.

கொரோனா காலத்தில். மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என நினைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். அரிசி கூட மக்களுக்கு வழங்க முடியவில்லையே மக்களுக்கு என்னால் இதுகூட செய்ய முடியவில்லையே என நினைத்து சிறு குழந்தை போல அழுததை நான் பார்த்தேன்.

கவர்னர் நேர்மையானவர் என்றால் மத்திய அரசிடமிருந்து அவர் புதுவைக்கு ஒரு ரூபாயாவது எடுத்து வந்துள்ளாரா? அப்படிப்பட்ட கவர்னர் நமக்கு தேவையா? ஏனாமில் விழா நடத்த கூடாது என்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே உத்தரவிட்டார். ஆனால் நடத்தி காட்டினோம். அவரது பணத்தை நம்பி இல்லை. அம்பேத்கர் சிலை திறக்க கூடாது என்றார் திறந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.