கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்: மந்திரி ஆனந்த்சிங் + "||" + Karnataka Chief-Minister Eduyurappa says we are ready to resign: Anand Singh
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்: மந்திரி ஆனந்த்சிங்
முதல்-மந்திரி எடியூரப்பா கூறினால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக ஆனந்த்சிங் தெரிவித்தார்.
மந்திரி பதவி கிடைக்கும்
கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங் பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த எங்களுக்கு எடியூரப்பா மந்திரி பதவி வழங்கியுள்ளார். மீதமுள்ளவர்களுக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி உறுதி அளித்தார். அதனால் நான் பா.ஜனதாவுக்கு வந்தேன்.
ராஜினாமா செய்ய தயார்
எனக்கு மந்திரி பதவியும் கிடைத்துள்ளது. பல்லாரி மாவட்டமும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது தான் எனது மிக முக்கியமான கோரிக்கை.
அந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. தற்போது மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. மந்திரி பதவிக்கு போட்டி அதிகமாக இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். எடியூரப்பா கேட்டுக் கொண்டால் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.
விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்கி உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று மந்திரி ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.