மாவட்ட செய்திகள்

மல்லூரில் எலக்ட்ரிக்கல் கடைக்காரர் மீது தாக்குதல்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் + "||" + Attack on electrical shopkeeper in Mallur: Merchants strike

மல்லூரில் எலக்ட்ரிக்கல் கடைக்காரர் மீது தாக்குதல்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மல்லூரில் எலக்ட்ரிக்கல் கடைக்காரர் மீது தாக்குதல்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
மல்லூரில் எலக்ட்ரிக்கல் கடைக்காரரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
பனமரத்துப்பட்டி:
மல்லூரில் எலக்ட்ரிக்கல் கடைக்காரரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
எலக்ட்ரிக்கல் கடைக்காரர்
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடசுந்தரம் (வயது 28). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மல்லூர் அருகே உள்ள வாழக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 பேர் வெங்கடசுந்தரத்தின் கடைக்கு வந்துள்ளனர். கடையில்  டியூப்லைட் வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த அவர்கள் டியூப்லைட் பழுதாகி விட்டதாக கூறி அதனை மாற்றி வேறு டியூப்லைட் தருமாறு கூறியுள்ளனர்.
தாக்குதல்
இதையடுத்து பழுதடைந்ததாக கூறப்பட்ட டியூப்லைட்டை வெங்கடசுந்தரம் சோதனை செய்து பார்த்தார். அப்போது அது நன்றாக எரிந்து உள்ளது. இருப்பினும் அவர்கள் வேறு டியூப்லைட்டை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு வெங்கட சுந்தரம் டியூப்லைட்டில் வாரண்டி எழுதியாச்சு என கூறியுள்ளார். 
 இதனால் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் வெங்கடசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெங்கடசுந்தரம் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடையடைப்பு
இந்த நிலையில் நேற்று காலை வெங்கடசுந்தரத்தை தாக்கிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மல்லூரில் உள்ள அனைத்து வணிகர்களும் ஒன்றாக இணைந்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மளிகை கடை, மருந்தகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இந்தநிலையில் மல்லூர் போலீசார் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களிடம் வெங்கடசுந்தரத்தை தாக்கிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு மேல் வியாபாரிகள் கடைகளை திறந்தனர். வியாபாரிகளின் திடீர் கடையடைப்பு போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.