மாவட்ட செய்திகள்

சிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல் - 3 போ் பலி + "||" + Three people including the driver were crushed to death

சிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல் - 3 போ் பலி

சிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல் - 3 போ் பலி
சிதம்பரம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாகினா். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிதம்பரம், 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை நாகையை சேர்ந்த சிவக்குமார் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய பயணிகள் அதில் இருந்தனர். 

அதேவேளையில் கடலூரில் இருந்து நள்ளிரவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்டெய்னர் லாரியை நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த அய்யப்பன்(51) என்பவர் ஓட்டினார்.

நேருக்கு நேர் மோதல்

அதிகாலை 2 மணி அளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள சாலையின் வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரியும், அரசு விரைவு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கன்டெய்னர் லாரியின் மீது மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார் மற்றும் பயணிகள் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த அன்புசாமி மகன் அன்பரசன்(37), நாகை பழைய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் வைரவன்(20) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தீவிர சிகிச்சை

அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் விபத்தில் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் அலறினர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர்.
பின்னர் படுகாயங்களுடன் பஸ்சுக்குள் தவித்த கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கலைவாணி(30), சென்னையை சேர்ந்த பிரவீன்குமார்(26), காரைக்காலை சேர்ந்த அருண்குமார்(30), ராஜமன்னார்குடி பகுதியை சேர்ந்த வினோதினி(28), நாகையை சேர்ந்த பாலமுருகன்(32) உள்பட 21 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து காரணமாக கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 
பின்னர் விபத்தில் பலியான பஸ் டிரைவர் உள்பட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான கன்டெய்னா் லாரி மற்றும் அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். 

போலீசார் விசாரணை

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பஸ்சும், கன்டெய்னா் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.