மாவட்ட செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி + "||" + DMK Candidate Ponmudi MLA Win again

தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி

தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றிபெற்றார்.
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன், இந்திய ஜனநாயக கட்சி செந்தில்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சிவ.பஞ்சவர்ணம், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சங்கர், நாடாளும் மக்கள் கட்சி ரஜினி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திருக்கோவிலூர் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. 
இந்த தொகுதியில் கடந்த மாதம் 6-ந் தேதி 349 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 313 வாக்காளர்களில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். அதாவது 76.27 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 

பொன்முடி எம்.எல்.ஏ. வெற்றி 

வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அரகண்டநல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று காலையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் பொன்முடி எம்.எல்.ஏ. முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தார். மொத்தம் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவில் பொன்முடி எம்.எல்.ஏ. தபால் வாக்குகள் சேர்த்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் 51 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதாவது பொன்முடி எம்.எல்.ஏ. 59 ஆயிரத்து 680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.