மாவட்ட செய்திகள்

பாதுகாப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை + "||" + The number of votes held safely

பாதுகாப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை

பாதுகாப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ஊட்டியில் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.
ஊட்டி

கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ஊட்டியில் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணிக்கை 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடந்தது. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, 3 அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி உள்பட 3 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, பொது பார்வையாளர்கள் மெல்வின் வாஸ், பனுதர் பெஹரா, சவ்ரவ் பஹரி மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அறைகளில் வைக்கப்பட்டு இருந்த சீல்கள் அகற்றப் பட்டது. சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தபால் வாக்குகள்

ஊட்டி தொகுதியில் 2,565, கூடலூர் தொகுதியில் 2,268, குன்னூர் தொகுதியில் 2,098 என மொத்தம் 6 ஆயிரத்து 931 தபால் வாக்குகள் பதிவானது. தொகுதி வாரியாக பெறப்பட்ட தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. ஒதுக்கப்பட்ட மேஜைகளில் தபால் வாக்குகள் கொட்டப்பட்டது.

அதனை வாக்கு எண்ணும் அலுவலர்கள் பிரித்து முகவர்களிடம் காண்பித்து ஓட்டு எண்ணும் பணியில் பாதுகாப்பாக ஈடுபட்டனர். வாக்குகள் எண்ணுவதை நேரடியாக முகவர்கள் பார்க்கும் வகையில் கம்பி வலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தபால் வாக்குகள் எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 4 மேஜைகள் போடப்பட்டது.

கணினியில் பதிவு

இதைத்தொடர்ந்து 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணும் அலுவலர்கள் அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வந்து மேஜையில் வைத்தனர். எந்திரத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றிய பிறகு அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு, ஒரு மேஜையில் 3 பேர் பணியில் இருந்தனர். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் வாக்கு எண்ணும் அறையில் உள்ள தகவல் பலகையில் வேட்பாளர் பெயர் வாரியாக வாக்குகள் குறிப்பிடப்பட்டது. 

சுற்று முடிவுகளை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மேலும் அதன் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டது. இதனை நுண் பார்வையாளர்கள் கண்காணித்தனர். வாக்கு எண்ணும் அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஊட்டி தொகுதியில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகள், குன்னூர் தொகுதியில் 20 சுற்றுகள், கூடலூர் தொகுதியில் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி கல்லூரி நுழைவுவாயில் முன்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கொரோனா பரவலை தடுக்க அரசியல் கட்சி முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று பாதிப்பில்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

இந்த சான்றிதழை காண்பித்த பின்னரே போலீசார் உள்ளே அனுமதித்தனர். நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.