வேலூரில், கண்காணிப்பு கேமராவை அணைத்துவிட்டு வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளையடித்த காசாளர் கைது


வேலூரில், கண்காணிப்பு கேமராவை அணைத்துவிட்டு வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளையடித்த காசாளர் கைது
x
தினத்தந்தி 29 March 2017 9:00 PM GMT (Updated: 29 March 2017 9:00 PM GMT)

வேலூரில் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட வங்கி காசாளர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக, ஆஸ்பத்திரி வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு மையத்திற்கு எதிரிலேயே தரை தளத்தில் தபால் அலுவலகமும், அதன் மேல் மாடியில் ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையும் செயல்பட்டு வருகிறது.

தனியார் ஆஸ்பத்திரிக்கு எந்த நேரமும் நோயாளிகள் வருவதால் இங்குள்ள வங்கியும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. வங்கி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறவர்களிடம் இருந்து பெறப்படும் சிகிச்சைக்கான பணம் இந்த வங்கியில் செலுத்தப்படுகிறது. இதனால் வங்கியில் சுழற்சி முறையில் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.

நள்ளிரவில்...

தனியார் ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கும் காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எந்த நேரமும் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவே காணப்படும். இரவு நேரத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வங்கி ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிமாறுதலாகினர். இரவு பணியில் காசாளர் நாகராஜன் (வயது 28) மற்றும் முருகன் என்ற ஊழியர் மட்டுமே இருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு வங்கி லாக்கர் இருக்கும் அறையில் சத்தம் கேட்டு உள்ளது. உடனே அவர்கள் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்றுபார்த்தனர்.

ரூ.22 லட்சம் கொள்ளை

அப்போது லாக்கர் திறந்திருந்தது. சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி கிடந்துள்ளது. லாக்கரில் வேறு பணம் எதுவும் இல்லை. மேலும் லாக்கர் இருக்கும் அறையின் மேல்பகுதியில் உள்ள ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில், போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது ஏற்கனவே பணியில் இருந்து சென்ற ஊழியர்கள் எழுதிய வங்கி கணக்குகளை பார்த்தனர். அதன்படி, வங்கியில் ரூ.22 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கவேண்டும். லாக்கரை பார்த்தபோது திறந்து கிடந்தது. அதில் பணம் எதுவும் இல்லை. எனவே ரூ.22 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

கைவிரல் ரேகை ஒப்பீடு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோரும் நேற்று அதிகாலையில் கொள்ளை நடந்த வங்கிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அணைத்துவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால் கேமரா மீது பதிவாகி இருந்த கைவிரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது.

இந்த கைவிரல் ரேகையை முதலில், நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து வங்கியில் சுழற்சி முறையில் பணியாற்றிய நாகராஜன், முருகன் மற்றும் 4 ஊழியர்களிடம் பெறப்பட்ட கைவிரல் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அப்போது கண்காணிப்பு கேமரா மீது பதிவாகி இருந்த கைவிரல் ரேகை நாகராஜனின் கைவிரல் ரேகையுடன் துல்லியமாக பொருந்தியது.

காசாளர் கைது

இதையடுத்து நாகராஜனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, காசாளர் நாகராஜன் வங்கி பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும், போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக, கொள்ளையர்கள் புகுந்து திருடியபோல் காண்பிக்க, வங்கியின் ஜன்னல் கம்பியை அவரே வளைத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான நாகராஜன் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 3½ ஆண்டுகளாக சென்னையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணியாற்றி வந்தார். 8 மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்து மாறுதலாகி வேலூருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story