மாவட்ட செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்: பிணவறையில் இடம் இல்லாததால் நுழைவு வாயிலில் வைக்கப்படும் உடல்கள் + "||" + Chennai Rajiv Gandhi At the Government Hospital Due to lack of space in the morgue Bodies placed at the entrance gate

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்: பிணவறையில் இடம் இல்லாததால் நுழைவு வாயிலில் வைக்கப்படும் உடல்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்: பிணவறையில் இடம் இல்லாததால் நுழைவு வாயிலில் வைக்கப்படும் உடல்கள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்: பிணவறையில் இடம் இல்லாததால் நுழைவு வாயிலில் வைக்கப்படும் உடல்கள் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்.
சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் இடம் இல்லாததால் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் நுழைவுவாயிலில் கிடத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள், ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகப்பெரிய உச்சத்தை தொடுகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. தினமும் இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. பெரும்பாலானோர் படுக்கை வசதி கிடைக்காமல் ஆஸ்பத்திரி வாசல்களிலே தவம் கிடக்கின்றனர். மூச்சுத்திணறலால் ஆம்புலன்ஸ் வாகனங்களில் வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பலர் ஆக்சிஜன் வினியோகம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே உயிரிழக்கின்றனர்.

தற்போது, தமிழகத்தில் தினசரி கொரோனா உயிரிழப்பு 300-ஐ நெருங்கி வருகிறது. கொரோனா தொற்றின் முதல் அலையின்போது கூட, அதிகபட்சமாக 127 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு இருந்தது. தற்போது உயிரிழப்பு 300-ஐ நெருங்கி வருவதால் பல அரசு ஆஸ்பத்திரி பிணவறைகள் இடம் இல்லாமல், உடல்கள் வெளியே வைக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் தினசரி 80 பேருக்குமேல் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர். அதில் 50 சதவீதம் உயிரிழப்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நிகழ்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது கொரோனாவால் உயிரிழந்த 5 முதல் 7 உடல்கள் அடுத்தடுத்து பிணவறைக்கு கொண்டு செல்லப்படுவதை காணலாம்.

இதனால் தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்க இடம் இல்லாமல், பிணவறை நுழைவுவாயில் அருகிலேயே கிடத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி பிணவறை 50 முதல் 70 உடல்கள் வைக்கப்படும் அளவுக்கு வசதி இருக்கும். இங்கு சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தற்போது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் பிணவறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் பிணவறையில் உடல்கள் வைக்க போதிய இட வசதி இல்லாமல், நுழைவு வாயில் அருகே கிடத்தி வைக்கப்படுகிறது. மேலும், பிணவறையின் வெளியேயும் இறந்தவர்களின் உடல்கள் தரையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுழைவுவாயிலுக்கு வெளியே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக கொளுத்தும் வெயிலில் உடல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடித்து கொடுக்க ஒரு நாளுக்குமேல் ஆவதால் தேங்கி கிடக்கும் உடல்களும் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல், இறந்தவர்களின் உடல்கள் பிணவறையின் நுழைவுவாயிலில் வைக்கப்படுவதால், அங்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த நிலைமையை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தற்போது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதால், இறந்தவர்களின் உடல்களை தேங்க விடாமல், உடனடியாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்கவும், அங்கு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.