மாவட்ட செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் + "||" + Bomb threat to actor Ajith Kumar's house in Inchambakkam

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க போவதாகவும் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது நடிகர் அஜித்குமார் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

நடிகர் அஜித்குமார், போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளித்ததுடன், அவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி உபசரித்தார்.

அஜித்குமார் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த நபர் யார்?, எங்கிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது? என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்தனர்.

அதில் ஏற்கனவே நடிகர் விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்குமார் என்பவர்தான் தற்போது அஜித்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இது தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.