மாவட்ட செய்திகள்

திருமுல்லைவாயலில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - கொரோனா அச்சம் காரணமாக பரிதாபம் + "||" + 3 members of the same family commit suicide by hanging in Thirumullaivayal - Pity due to corona fear

திருமுல்லைவாயலில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - கொரோனா அச்சம் காரணமாக பரிதாபம்

திருமுல்லைவாயலில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - கொரோனா அச்சம் காரணமாக பரிதாபம்
கொரோனா அச்சம் காரணமாக தாய்-தந்தை-மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு மெயின் ரோட்டில் வசிப்பவர் வெங்கட்ராமன் (வயது 78). இவர், தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது வீட்டின் மாடியில் இவருடைய தங்கை மல்லிகேஸ்வரி (64), தனது கணவர் டில்லி (74), மகள் நாகேஸ்வரி (34) ஆகியோருடன் வசித்து வந்தார்.

டில்லி, ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் ஒரு மாதத்திலேயே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு நாகேஸ்வரி, பெற்றோருடன் வந்து தங்கிவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகேஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் விவாகரத்து ஆனது.

குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததாலும், மகள் நாகேஸ்வரிக்கு விவாகரத்து ஆனதாலும் டில்லி-மல்லிகேஸ்வரி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இவர்கள் 3 பேரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மருந்து கடைக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தனர். ஆனாலும் இவர்களுக்கு காய்ச்சல் குணமாகவில்லை என தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் மல்லிகேஸ்வரியின் மற்றொரு அண்ணன் ஜெகதீசன், தனது அண்ணன் வெங்கட்ராமனுக்கு போன் செய்து தங்கை மல்லிகேஸ்வரிக்கு போன் செய்தால் எடுக்கவில்லை என்று கூறினார். இதனால் வெங்கட்ராமன், இரவு 11 மணியளவில் வீட்டின் மாடியில் வசிக்கும் தங்கை மல்லிகேஸ்வரி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.

கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஹாலில் டில்லி, அவருடைய மனைவி மல்லிகேஸ்வரி, மகள் நாகேஸ்வரி ஆகிய 3 பேரும் புடவையால் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருமுல்லைவாயல் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் காரணமாக ஒரே நேரத்தில் 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தாய்-தந்தை-மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.