மாவட்ட செய்திகள்

சென்னை பூக்கடை பகுதியில் நகை கடையில் ரூ.5 லட்சம் திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் + "||" + 5 lakh stolen from jewelery shop Dismissal of 2 policemen

சென்னை பூக்கடை பகுதியில் நகை கடையில் ரூ.5 லட்சம் திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடை பகுதியில் நகை கடையில் ரூ.5 லட்சம் திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நகை கடையில் ரூ.5 லட்சத்தை திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பெரம்பூர், 

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பிரபல நகை கடை உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நகை கடை மூடப்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று பூக்கடை போலீஸ் நிலைய ரோந்து போலீஸ்காரர்களான சர்ஜுன் மற்றும் முஜிப் ரகுமான் ஆகியோர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்த நகைகடையின் கதவு பாதி திறந்து இருப்பதை கண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் கடைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது கடைக்குள் ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைத்து எண்ணிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஊரடங்கு நேரத்தில் எப்படி நீங்கள் கடையை திறந்து உள்ளே வந்தீர்கள்?. இங்கு என்ன செய்கிறீர்கள்? என்று விசாரிப்பதுபோல் கடைக்குள் சென்று, அங்கு அடுக்கி வைத்து இருந்த பண கட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை நைசாக திருடி இருவரும் தங்கள் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டனர். அதன் பிறகு இருவரும் சென்று விட்டனர்.

போலீஸ்காரர்கள் இருவரும் சென்ற பிறகு கடை ஊழியர்கள் பணத்தை எண்ணும் போது ரூ.5 லட்சம் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கடைக்கு வந்த 2 பேர் மீது சந்தேகம் அடைந்த ஊழியர்கள், இதுபற்றி பூக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் கடைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடைக்குள் புகுந்து விசாரிப்பது போல் நடித்த போலீஸ்காரர்கள் சர்ஜுன் மற்றும் முஜிப் ரகுமான் இருவரும் பணத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுபற்றி பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரனிடம் கடையின் உரிமையாளர் புகார் செய்தார். இதுபற்றி விசாரித்த அவர், நகை கடையில் ரூ.5 லட்சம் திருடியதாக போலீஸ்காரர்கள் சர்ஜுன் மற்றும் முஜிப் ரகுமான் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.