மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது + "||" + The program to see the presence of God began at the temple

மண்டைக்காடு கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது

மண்டைக்காடு கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
கோவிலில் தீ விபத்து
குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர்.
 தேவ பிரசன்னம்
இவர்கள் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார். தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பதால், பக்தர்கள் மண்டைக்காடு கோவில் முன்பு திரளாக குவிந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்களில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலோரத்தில் இருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்  உருவாகும் முன்பு, மேற்கே உள்ள சாஸ்தா கோவில் மூல கோவிலாகும். இந்த 2 கோவில்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த கோவிலில் பகவதி அம்மன் மட்டுமல்ல, பிற தேவதைகளும் உண்டு. இது ரத்த காயத்தினால் வெளிப்பட்ட சுயம்பு மூலவர் கொண்ட கோவில். தேவிக்கு அதிக சக்தி உள்ளது. அந்த சக்தியை அறியாமல் நிர்வாகம் செயல்பட்டதால், பிரச்சினைகள் நடந்து வருகிறது. 
பூஜைகள் முறையாக
பூஜைகள் முறையாக நடைபெற வேண்டும். கோவிலில் லட்சார்ச்சனை, திருவிழா பூஜைகள், பக்தர்களால் நடத்தப்படும் பூஜைகள், அன்னதானம் போன்றவை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். மாசிக்கொடையின் போது நடந்த ஒரு பூஜை, சமீப காலமாக நடத்தப்படவில்லை.
கோவிலில் அம்மன் வடிவலான புற்று வளர்ந்து வருகிறது. வாஸ்து படி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். கோவில் உயரம் ஏற்கனவே 2 முறை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறை உயர்த்த வேண்டும். கோவிலுக்குள் தரமான நெய் தீபம் ஏற்ற வேண்டும். கோவிலின் வடக்கே 40 ஏக்கர் கோவில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ேதவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
கலந்து கொண்டவர்கள்
தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவில் தந்திரி சங்கர நாராயணன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், தேவசம் உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஆய்வாளர் கோபாலன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், 
எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ் மற்றும் மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.