மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் + "||" + people

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள்  ஆர்வம்
உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
உடுமலை
உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள்  ஆர்வம் காட்டி வருகிறார்கள். 
தொற்று அபாயம்
கொரோனா தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இதில் பொதுமக்களின் வசதிக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகின்றனர். அதேசமயம் முகாம்களில் போதிய சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நிற்கின்றனர். இதில் யாருக்காவது தொற்று உள்ளதா?  என்று யாருக்கும் தெரியாத நிலை உள்ளதால் குறிப்பிட்ட இடைவெளி இல்லாமல் நிற்பதால் தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
கணக்கம்பாளையம் 
இந்த நிலையில் உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பிரைட் பிரைமரி நர்சரி பள்ளியில் நேற்று 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், அதற்கு அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் காலை 10 மணி முதல் டோக்கன் பெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அந்த பள்ளியின் நுழைவு வாயில் கதவில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து காலை 6 மணி முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக பொதுமக்கள் வருகை அதிகரித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். அவர்களும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதைத்தொடர்ந்து ஆண்கள் தனி வரிசையாகவும், பெண்கள் தனி வரிசையாகவும் நீண்ட தூரம் நின்றிருந்தனர். பொதுமக்கள் கடும் வெயிலிலும் காலை உணவு சாப்பிடாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
300 பேருக்கு தடுப்பூசி
பின்னர் எரிசனம்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் வந்ததும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதேபோன்று உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நகராட்சி பகுதியில் உள்ள உடுமலை ஶ்ரீகன்னிகாபரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் 150பேருக்கும், ஶ்ரீவெங்கடகிருஷ்ணா சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 150 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஏமாற்றம்
இதற்கிடையில் தடுப்பூசிக்காக காலை முதல் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் சிலர் காலை சாப்பாட்டுக்காக டோக்கனுடன் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் சுகாதார துறை அலுவலர்கள் முகாமிற்கு வந்தனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, ஏற்கனவே வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெயர்களை பதிவு செய்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் டோக்கனுடன் வீட்டுக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தனர். ஆனால் அதற்குள் கொரோனா தடுப்பூசி முடிந்து விட்டதால், காலையில் வந்து காத்திருந்து டோக்கன் வாங்கி சென்றும் கொரோனா தடுப்பூசி போடமுடியாமல் போனதே என்று 40க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவர்களுக்கு அடுத்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு டோக்கன் இல்லாமலே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், சிலர் வருவாய் துறை அலுவலர்களிடம் குற்றம் சாட்டி மனு கொடுத்துள்ளனர்.