மாவட்ட செய்திகள்

இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசயம் + "||" + The miracle of the resurrection while burying the child who was said to be dead

இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசயம்

இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசயம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறி ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெரியகுளம்:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறி ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்ணுக்கு பிரசவம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரராஜா (வயது 33). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக பாத்திமா மேரி கர்ப்பம் ஆனார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பாத்திமா மேரியை, அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
நள்ளிரவில் பாத்திமா மேரிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவாக இருப்பதாக கூறிய மருத்துவக்குழுவினர், பிறக்கும் போதே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட பாத்திமாமேரியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உயிர்த்தெழுந்த அதிசயம்
இதையடுத்து அந்த குழந்தை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கண்ணீருடன் உடலை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டனர். அதன்படி பெரியகுளம்-தேனி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு உறவினர்கள் குழந்தையை எடுத்து சென்றனர். 
அங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தபோது, குழந்தையின் கைகள் திடீரென அசைந்தன. இதை பார்த்த உறவினர்கள், இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 
உறவினர்கள் வாக்குவாதம்
இதையடுத்து உடனடியாக குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். 
இறந்ததாக ஒப்படைக்கப்பட்ட குழந்தை, மீண்டும் உயிருடன் கொண்டு வரப்பட்டதை கண்டு மருத்துவக்குழுவினரயைும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
மேலும் குழந்தை இறந்ததாக கூறி அலட்சியமாக இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
 கலெக்டர் உத்தரவு 
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதனுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதனிடம் கேட்டபோது, "பாத்திமா மேரிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை சுமார் 700 கிராம் இருந்துள்ளது. தற்போது அந்த குழந்தைக்கு இன்குபேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடலை முழுமையாக பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக கூறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர், செவிலியர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.