மாவட்ட செய்திகள்

ரூ.2.68 கோடியில் தெப்பக்குளம் சீரமைப்பு: சிறுவாபுரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல் + "||" + 2.68 crore Theppakulam renovation: Kumbabhishekam at Siruvapuri Murugan temple soon Minister Sekarbabu

ரூ.2.68 கோடியில் தெப்பக்குளம் சீரமைப்பு: சிறுவாபுரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ரூ.2.68 கோடியில் தெப்பக்குளம் சீரமைப்பு: சிறுவாபுரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
சிறுவாபுரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும், கோவில் தெப்பக்குளம் ரூ.2.68 கோடியில் சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்தவுடன் விரைவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப்படும். கோவில் குளத்தில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் படித்துரை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.’ என்றார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), சுதர்சனம் (மாதவரம்), மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் சுப்பிரமணியன், கோவில் செயல் அதிகாரி நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோதண்டராமர் கோவில்

அதேபோல் பொன்னேரி அடுத்த பழையஎருமைவெட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புகழ்மிக்க வரமுத்தீஸ்வரர் கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த வேண்டும். ஆனால் இதுவரை குடமுழுக்கு விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், நேற்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உட்பட பல அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கோதண்டராமர் கோவில் வரமுத்தீஸ்வரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், பாழடைந்துள்ள கோவில் குளத்தை செப்பனிடவும் ராஜகோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பவானி அம்மன் கோவில்

இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா மற்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி மாத விழா குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

பவானி அம்மன் கோவிலில் 14 வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் 1, 3, 5, 7 மற்றும் 9 வாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே பக்தர்கள் வருகை 2 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்து, மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் வாயிலாக குழுக்கள் அமைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகையை சீர்படுத்தி வரிசையாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி தெப்பகுளத்தில் சாமி நீராடி விட்டு மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து கலெக்டர் தலைமையில் கலந்தாலோசனை நடத்தி, கொரோனா நோய்க் காலத்தில் கூட்டம் சேராமல் தவிர்த்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் பட்சத்தில், 30-ந்தேதி அன்று அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி பக்தர்கள் பூஜை செய்வதற்கு அனுமதி கேட்டு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), ச.சந்திரன் (திருத்தணி), க.கணபதி (மதுரவாயல்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மாவட்ட வருவாய் அதிகாரி மீனா பிரியதர்ஷினி, உதவி கமிஷனர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. போராட்டம் நடத்தும் நர்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
3. மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கள் திறப்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.
5. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன்: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் தகவல்
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.