மாவட்ட செய்திகள்

கே.ஆர்.எஸ். அணை 100 அடியை எட்டியது + "||" + krs dam reached 100 feet

கே.ஆர்.எஸ். அணை 100 அடியை எட்டியது

கே.ஆர்.எஸ். அணை 100 அடியை எட்டியது
தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து கே.ஆர்.எஸ். அணை 100 அடியை எட்டி உள்ளது.
மண்டியா: தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து கே.ஆர்.எஸ். அணை 100 அடியை எட்டி உள்ளது.

கிருஷ்ணராஜ சாகர்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதாவது, பாகமண்டலா, தலைக்காவிரியில் மழை பெய்து வருகிறது. 

இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்படி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. 

100 அடியை எட்டியது

கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நேற்று மாலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 100.05 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,581 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,178 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இதே நாளில் கே.ஆர்.எஸ். அணையில் 107.30 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கபினி

இதேபோல, கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. 
நேற்று காலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2,279.76 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9,292 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8,750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

10 ஆயிரம் கனஅடி தண்ணீர்

இந்த நிலையில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 10,928 கனடி தண்ணீர் செல்கிறது. கபினி அணையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றிலும் சென்று டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.