மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம் + "||" + Crossing the Yelagiri Express train Passenger struggle

அரக்கோணம் அருகே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

அரக்கோணம் அருகே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
சீசன் டிக்கெட் வழங்கக்கோரி அரக்கோணம் அருகே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்
சீசன் டிக்கெட்

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை நிமித்தமாகவும், தொழில் ரீதியாகவும் சென்னைக்கு ரெயிலில் சென்று வருகின்றனர். அவர்களில் பலர் சீசன் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணம் செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் கடந்த மாதம் முதல் பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரெயில் மறியல் போராட்டம்

ரெயில் சேவை தொடங்கிய பின்னரும் பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படவில்லை. எனவே மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சீசன் டிக்கெட் வழங்கப்படவில்லை.  
இதனை கண்டித்து நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 மணி நேரம் தாமதம்

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் ரெயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு சுமார் 2 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.