மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் + "||" + water

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓமலூர்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் குழாயில் உடைப்பு
ஓமலூர் அருகே உள்ள கோட்டைமேடுபட்டி ஊராட்சி ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.சி.செட்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இந்த குழாய் சீரமைக்கப்பட வில்லை என்றும், கடந்த 2 மாதமாக ஆ.சி.செட்டிப்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இந்தநிலையில் ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்.சி.செட்டிப்பட்டி பிரிவு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திராசுதீன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிப்பதாக தெரிவித்தனர். 
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.