மாவட்ட செய்திகள்

கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு + "||" + Breaking bills in the temple and stealing money

கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
நிலக்கோட்டை அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து அணைப்பட்டி சாலையில், 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலின் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். 

பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்தனர். அதன்பிறகு அவற்றை சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று உண்டியல்களின் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். 

இந்தநிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி உண்டியல்கள் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்ட சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.